இலவச வீட்டுமனை வழங்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரதம்


இலவச வீட்டுமனை வழங்கக்கோரி வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 17 Oct 2018 3:45 AM IST (Updated: 17 Oct 2018 4:03 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் இலவச வீட்டுமனை கேட்டு வீடுகளில் கருப்புக்கொடி கட்டி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை, 

கோவை முத்தணன்குளம் பகுதியை ஒட்டி, தடாகம் ரோட்டில் இருந்து சுண்டப்பாளையம் ரோடு வரை 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த பகுதியை சேர்ந்தவர்கள் கடந்த 90 ஆண்டுகளுக்கும் மேல் அங்கு வசித்து வருகிறார்கள். இதற்கிடையே நீர்நிலை பகுதி அருகே குடியிருந்து வருபவர்களை அப்புறப்படுத்தி, அவர்களுக்கு மாற்று இடம் வழங்க அரசு உத்தரவிட்டது.

அதன்படி இந்த பகுதியில் வசித்து வருபவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் வழங்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி அங்குள்ள சிலரை அதிகாரிகள் சந்தித்து அவர்களிடம் பேசி, ஆதார் கார்டு நகலை பெற்று அவர்களுக்கு மாற்று இடத்தில் வீடுகள் வழங்க டோக்கன் கொடுத்ததாக கூறப்படுகிறது.

அதற்கு அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், எங்களுக்கு மாற்று வீடுகள் வேண்டாம், வீட்டுமனை கொடுத்தால்போதும் என்று தெரிவித்தனர். அத்துடன் தங்களுக்கு வீட்டுமனை கேட்டு கலெக்டரிடம் மனு கொடுத்தனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிகிறது.

இதையடுத்து உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என்று அந்தப்பகுதியை சேர்ந்தவர்கள் அறிவித்தனர். இதற்கு போலீசார் அனுமதி கொடுக்கவில்லை. இதன் காரணமாக அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் உழைப்போர் உரிமை இயக்க ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் தலைமையில் நேற்று வீடுகளுக்குள் அமர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் இந்த கோரிக்கையை வலியுறுத்தி தங்கள் வீடுகளில் கருப்புக்கொடியும் கட்டி இருந்தனர். இது குறித்து போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் கூறியதாவது:-

நாங்கள் இங்கு 90 ஆண்டுகளாக குடியிருந்து வருகிறோம். நீர்நிலையை ஆக்கிரமித்து நாங்கள் வீடுகள் கட்டவில்லை. எங்களுக்கு கடந்த 2010-ம் ஆண்டில் வீரகேரளம் பகுதியில் வீட்டுமனை வழங்குவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஆணை இன்னும் வழங்கப்படவில்லை. நாங்கள் இங்கிருந்து செல்ல தயாராகதான் உள்ளோம். எங்களுக்கு அடுக்குமாடி குடியிருப்பில் வீடுகள் வேண்டாம். வீட்டுமனை வழங்கினால்போதும்.

ஆனால் அதிகாரிகள் எங்கள் கோரிக்கைக்கு செவிசாய்ப்பது இல்லை. தற்போது எங்களுக்கு போராட்டம் நடத்தக்கூட அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக நாங்கள் வீடுகளுக்குள்ளும், வீட்டின் முன்பகுதியிலும் அமர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகிறோம். அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில்தான் நாங்கள் இந்த போராட்டத்தில் ஈடுபடுகிறோம். எங்கள் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை என்றால் அனைவரும் சேர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபடுவோம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள். 

Next Story