ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் தினத்தன்று மைசூரு அரண்மனையில் ரத்தம் சிந்தும் சண்டை போட்டி


ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் தினத்தன்று மைசூரு அரண்மனையில் ரத்தம் சிந்தும் சண்டை போட்டி
x
தினத்தந்தி 17 Oct 2018 4:07 AM IST (Updated: 17 Oct 2018 4:07 AM IST)
t-max-icont-min-icon

ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் தினத்தன்று மைசூரு அரண்மனையில் ரத்தம் சிந்தும் சண்டை போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது.

மைசூரு,

உலகப்புகழ் பெற்ற மைசூரு தசரா விழா கடந்த 10-ந் தேதி கோலாகலமாக தொடங்கியது. தசரா விழா தொடங்கியது முதல் தினமும் பல்வேறு கலை நிகழ்ச்சிகள், கலாசார விழாக்கள், ஊர்வலங்கள், விளையாட்டு போட்டிகள், சாகச நிகழ்ச்சிகள், இசை நிகழ்ச்சிகள், நாடகங்கள் என பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன. மேலும் அரண்மனையிலும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

குறிப்பாக இளவரசர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவது, ஜம்பு சவாரி ஊர்வல ஒத்திகை நிகழ்ச்சி என பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் மைசூருவில் குவிந்து வரும் பல்லாயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியில் திளைத்து வருகிறார்கள்.

இந்த நிலையில் தசரா விழாவின் 7-வது நாளான நேற்றும் மைசூருவில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தன. அவற்றை சுற்றுலா பயணிகள் கண்டுகளித்தனர். இந்த நிலையில் தசரா விழாவின் சிகர நிகழ்ச்சியான ஜம்பு சவாரி ஊர்வலம் நடக்கும் விஜயதசமி அன்று(19-ந் தேதி) அரண்மனை வளாகத்தில் ரத்தம் சிந்தும் சண்டை போட்டி நடத்த திட்டமிடப்பட்டு உள்ளது. அதாவது ஒரு குறிப்பிட்ட சமுதாயத்தினர் மட்டுமே பங்கேற்கும் இந்த போட்டியில், போட்டியாளர்கள் தலையை மொட்டை அடித்துக் கொண்டு பங்கேற்பார்கள்.

அப்போது அவர்கள் தங்களுடைய கை விரல்களில் கத்தி போன்ற சிறிய அளவிலான கூர்மையான ஆயுதங்களை கட்டிக்கொண்டு சண்டையிடுவார்கள். குறிப்பாக அவர்கள் எதிராளியின் தலையை குறிவைத்து தாக்குவார்கள். இதில் யாருக்கு முதலில் ரத்தம் வருகிறதோ அவரே தோல்வி அடைந்தவர் ஆவார். அவரை தாக்கியவர் வெற்றிபெற்றவராக அறிவிக்கப்படுவார்.

இந்த போட்டியில் பங்கேற்று வெற்றிபெறுபவர்களுக்கு பரிசு வழங்கப்பட்ட பின்னரே ஜம்பு சவாரி ஊர்வலத்திற்கான ஏற்பாடுகள் தயார் செய்யப்படும். இந்த ஆண்டும் அதேபோல் போட்டி நடத்தப்படுகிறது. இந்த போட்டியில் பெங்களூருவைச் சேர்ந்த ராகவேந்திரா, ராம்நகர் மாவட்டம் சென்னப்பட்டணாவைச் சேர்ந்த வித்யாதர், சாம்ராஜ்நகர் டவுனைச் சேர்ந்த புருஷோத்தம், மைசூருவைச் சேர்ந்த மஞ்சுநாத் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

அரண்மனை வளாகத்தில் அமைந்திருக்கும் காயத்திரி தேவி கோவில் முன்பு விஜயதசமி அன்று இந்த போட்டி நடைபெற இருக்கிறது. இதற்காக அங்கு மணல் நிரப்பப்பட்டு சிறிய அளவில் மைதானம் தயார் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று ஜம்பு சவாரி ஊர்வலத்தில் பங்கேற்கும் யானைகள், குதிரைகள், ஒட்டகங்கள் ஆகியவற்றுக்கு கடைசி பயிற்சி அளிக்கப்பட்டது. அதேபோல் போலீஸ் படை, ஊர்க்காவல் படை, போக்குவரத்து போலீசார் போன்ற போலீஸ் பிரிவில் உள்ள அனைத்து படையினருக்கும் பயிற்சி அளிக்கப்பட்டது. குறிப்பாக 750 கிலோ எடை கொண்ட தங்க அம்பாரியை சுமக்க உள்ள அர்ஜூனா யானைக்கு அம்பாரி கட்டும் பயிற்சி நடந்தது. ஜம்புசவாரி ஊர்வல ஒத்திகையும் நடந்தது.


Next Story