தாமிரபரணி புஷ்கர விழா: விடுமுறை நாட்களில் கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் கலெக்டர் உத்தரவு
விடுமுறை நாட்களில் தாமிரபரணி புஷ்கர விழா கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
நெல்லை,
விடுமுறை நாட்களில் தாமிரபரணி புஷ்கர விழா கண்காணிப்பு பணியில் கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும் என நெல்லை மாவட்ட கலெக்டர் ஷில்பா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
புஷ்கர விழாதாமிரபரணி புஷ்கர விழா கடந்த 11–ந் தேதி தொடங்கி, தொடர்ந்து நடந்து வருகிறது. பாபநாசம் முதல் புன்னக்காயல் வரை படித்துறைகளில் காலையில் புனித நீராடுதல் நிகழ்ச்சியும், மாலையில் ஆரத்தி, வழிபாடு போன்ற நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது. வெளி மாவட்டம் மட்டும் அல்லாமல் வெளிமாநிலத்தில் இருந்தும் பக்தர்கள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படுகிறது.
இன்று (வியாழக்கிழமை) சரசுவதி பூஜை, நாளை (வெள்ளிக்கிழமை) விஜயதசமி அரசு விடுமுறை ஆகும். சனிக்கிழமை, ஞாயிற்றுக்கிழமை வழக்கம் போல் அரசு விடுமுறையாகும். தொடர்ந்து 4 நாட்கள் அரசு அலுவலகங்கள், பள்ளிக்கூடங்களுக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஆலோசனை கூட்டம்தாமிரபரணி புஷ்கர விழாவுக்கு விடுமுறை நாட்களில் அதிக அளவு பக்தர்கள் வந்து புனித நீராடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்து. கலெக்டர் ஷில்பா தலைமை தாங்கினார்.
அப்போது அவர் பேசியதாவது:–
தாமிரபரணி புஷ்கர விழா தொடர்ந்து நடந்து வருகிறது. பாபநாசம் முதல் அனைத்து படித்துறைகளிலும் பக்தர்கள் புனித நீராடி வருகிறார்கள். பக்தர்களின் பாதுகாப்புக்கு நெல்லை மாவட்டம் சார்பில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
திரளான பக்தர்கள்...இந்த நிலையில் தொடர்ந்து 4 நாட்கள் அரசு விடுமுறை வருகிறது. திரளான பக்தர்கள் புனித நீராட வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. வருவாய்த்துறை, தீயணைப்பு துறை, உள்ளாட்சி அமைப்புகள் சேர்ந்து தீர்த்த கட்டங்கள், படித்துறைகளில் பாதுகாப்பு பணிகளுக்கு கூடுதல் ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
ஆழமான பகுதிகளுக்கு பக்தர்கள் செல்லாமல் பார்த்து கொள்ள வேண்டும். பாதுகாப்பு பணிக்கு கூடுதல் போலீசார் நியமிக்க வேண்டும்.
தரமான உணவு பொருட்கள்மேலும், புஷ்கர விழாவையொட்டி படித்துறைகளில் தற்காலிக கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு உள்ளன. அந்த கடைகளில் தரமான உணவு பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறதா? என்பதை கண்காணிக்க வேண்டும். உணவு பொருட்களின் பாக்கெட்டுகளில் தயாரிப்பு தேதி அச்சிடப்பட்டு உள்ளதா? என அதிகாரிகள் ஆய்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் நெல்லை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி, நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண்சக்திகுமார், நெல்லை மாநகர போலீஸ் துணை கமிஷனர் சுகுணா சிங் உள்பட பலர் கலந்து கொண்டனர்.