தூத்துக்குடியில் 5–வது நாளாக சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை கலெக்டர் அலுவலகத்தில் கட்டு, கட்டாக ஆவணங்களை சேகரித்துச்சென்றனர்
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 5–வது நாளாக நேற்று விசாரணை நடத்தினார்கள்.
தூத்துக்குடி,
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக தூத்துக்குடியில் சி.பி.ஐ. அதிகாரிகள் 5–வது நாளாக நேற்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் கட்டு, கட்டாக ஆவணங்களை சேகரித்துச்சென்றனர்.
துப்பாக்கி சூடுதூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடக்கோரி கடந்த மே மாதம் 22–ந் தேதி கலெக்டர் அலுவலகம் முன்பு மக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது நடந்த தடியடி மற்றும் துப்பாக்கி சூட்டில் 13 பேர் இறந்தனர். 100–க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.
இதுதொடர்பாக சென்னை சி.பி.ஐ. 15 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்தது. தொடர்ந்து சி.பி.ஐ. சூப்பிரண்டு சரவணன் தலைமையில் துணை சூப்பிரண்டு ரவி உள்ளிட்ட 16 சி.பி.ஐ. அதிகாரிகள் அடங்கிய குழுவினர் கடந்த 13–ந் தேதி முதல் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆவணங்கள்இந்த நிலையில் 5–வது நாளாக நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் பல்வேறு குழுக்களாக பிரிந்து விசாரணையை தீவிரப்படுத்தினர். காயம் அடைந்தவர்கள் மற்றும் சம்பவ இடங்களில் இருந்த வீடியோ பதிவுகள் உள்ளிட்டவைகளை சேகரித்து உள்ளனர்.
அதே போன்று துணை சூப்பிரண்டு ரவி தலைமையிலான சி.பி.ஐ. அதிகாரிகள் நேற்று காலை கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். அங்கு துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான ஏராளமான ஆவணங்களை சேகரித்தனர். அந்த ஆவணங்களை கட்டு, கட்டாக காரில் ஏற்றி எடுத்துச்சென்றனர்.