3-வது நாளாக வேலை நிறுத்தம்: நியாய விலைக்கடை பணியாளர்கள் சாலை மறியல் - 233 பேர் கைது
விழுப்புரம் மாவட்டத்தில் நியாய விலைக்கடை பணியாளர்களின் வேலை நிறுத்தம் 3-வது நாளாக நீடித்தது. விழுப்புரத்தில் மறியலில் ஈடுபட்ட 233 பேர் கைது செய்யப்பட்டனர்.
விழுப்புரம்,
ஊதிய உயர்வு, ஓய்வூதியம், பணிவரன்முறை உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் கடந்த 15-ந் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தை தொடங்கினர்.
இவர்களின் போராட்டம் நேற்று 3-வது நாளாக நீடித்தது. விழுப்புரம் மாவட்டத்தை பொறுத்தவரை மாவட்டம் முழுவதும் உள்ள 2,020 நியாய விலைக்கடைகளையும் அடைத்து அதன் பணியாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் கடந்த 3 நாட்களாக அத்தியாவசிய பொருட்களை வாங்க முடியாமல் பொதுமக்கள் பெரிதும் பாதிப்படைந்துள்ளனர்.
இந்த போராட்டத்தின் தீவிரமாக விழுப்புரம் புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள நகராட்சி மைதானம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி நியாய விலைக்கடை பணியாளர்கள் நேற்று காலை 11.45 மணியளவில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு தமிழ்நாடு அரசுப்பணியாளர் சங்க சிறப்பு தலைவர் கு.பாலசுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட செயலாளர் சிவக்குமார், தமிழ்நாடு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் குமார், செயலாளர் சம்பத், இணை செயலாளர் கோபிநாத், துணைத்தலைவர்கள் தனராஜ், பெருமாள், பொருளாளர் ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
இந்த மறியல் காரணமாக விழுப்புரம்- திருச்சி நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. உடனே விழுப்புரம் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் ராஜன், ராபின்சன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சரஸ்வதி, ராஜேஸ்வரி மற்றும் போலீசார் விரைந்து வந்து மறியலில் ஈடுபட்ட 29 பெண்கள் உள்பட 233 பேரை கைது செய்து வாகனங்களில் ஏற்றிச்சென்று விழுப்புரத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பின்னர் மாலையில் இவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story