தாம்பரம் பகுதியில் கஞ்சா வைத்திருந்த கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேர் கைது
தாம்பரம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட மற்றும் கஞ்சா வைத்து இருந்ததாக கல்லூரி மாணவர்கள் உள்பட 6 பேரை போலீசார் கைது செய்தனர்.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் குறிஞ்சி நகர் பகுதியில் தாம்பரம் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அங்குள்ள ஏரிக்கரை அருகில் சந்தேகப்படும்படியாக நின்ற 3 பேரிடம் போலீசார் விசாரித்தனர். அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறியதால், சந்தேகமடைந்த போலீசார், 3 பேரையும் சோதனை செய்தனர்.
அதில் அவர்களிடம் 300 கிராம் கஞ்சா இருந்தது. அவர்களை போலீஸ் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர். அதில் அவர்கள், மேற்கு தாம்பரம் ஏரிக்கரை தெருவைச்சேர்ந்த நந்தகுமார் என்ற நந்தா (வயது 23), மேற்கு தாம்பரம் திருவள்ளுவர்புரம், 2–வது தெருவைச்சேர்ந்த பிரவீன்குமார் என்ற அப்பு (19), மேற்குதாம்பரம், இரும்புலியூர் தமிழ் பூங்கா தெருவைச்சேர்ந்த ஹரிஹரன் (24) என்பதும், அந்த பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதும் தெரிந்தது.
3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை தாம்பரம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதே போல தாம்பரம் அடுத்த முடிச்சூர், அமுதம் நகர் பகுதியில் கல்லூரி மாணவர்கள் கஞ்சா உபயோகித்து வருவதாக பீர்க்கன்காரணை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதியில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு திடீர் சோதனையில் ஈடுபட்டனர். அதில் அங்கு 100 கிராம் கஞ்சா இருந்தது.
இதையடுத்து அந்த வீட்டில் தங்கி இருந்த 3 பேரிடம் விசாரித்தனர். அதில் அவர்கள் விழுப்புரம் மாவட்டத்தைச்சேர்ந்த சரண் ராம் (19), காரைக்கால் பகுதியை சேர்ந்த ஜெய் விக்னேஷ் (20), அஜித்குமார் (20) என்பதும், இவர்கள் மாமல்லபுரம் அருகில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதாகவும், தொடர்ந்து கஞ்சா உபயோகித்து வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.