நாட்டு வெடிகுண்டு வீசி இரட்டை கொலை: கூலிப்படையினரை பிடிக்க 3 தனிப்படை
ராமநாதபுரத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி நடந்த இரட்டை கொலை சம்பவம் கூலிப்படையினரை வைத்து நடந்துள்ள அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் வாலாந்தரவையில் கடந்த ஜனவரி 16–ந்தேதி பொங்கல் விழா நடத்துவது தொடர்பாக சூரப்புளி என்ற சுப்பிரமணியன் மகன் தர்மராஜ் (வயது 38) தரப்பினருக்கும், அம்மன்கோவில் பஞ்சவர்ணம் மகன் பாஸ் என்ற பாஸ்கரன் தரப்பினருக்கும் மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் தர்மராஜ் தாக்கப்பட்டதால் பாஸ்கரன் கைது செய்யப்பட்டார். இதற்கு பழி வாங்குவதற்காக கடந்த மே மாதம் 20–ந்தேதி இரவு தர்மராஜ் தரப்பினர் காதணி விழா முடிந்து படுத்திருந்த பூமிநாதன், விஜய் ஆகியோரை சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இந்த இரட்டை கொலை சம்பவம் தொடர்பாக கேணிக்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து தர்மராஜ், அவரின் தம்பி கார்த்திக் உள்பட 20 பேரை கைது செய்தனர். இவர்களில் 14 பேர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர். ஆனால் கோர்ட்டில் குண்டர் சட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்த இரட்டை கொலை சம்பவம் காரணமாக தர்மராஜ் தரப்பினரை பழிக்குப்பழி வாங்குவதற்காக இறந்தவர்களின் தரப்பினர் காத்திருந்தனர்.
இதனிடையே ராமநாதபுரம் அருகே கடந்த மாதம் 10–ந்தேதி பேக்கரி ஒன்றில் நடைபெற்ற தாக்குதல் சம்பவம் காரணமாக போலீசார் தர்மராஜின் தம்பி கார்த்திக்(36) உள்பட 4 பேரை கைது செய்தனர். இந்த வழக்கில் கார்த்திக் ராமநாதபுரம் கேணிக்கரை போலீசில் தினமும் காலை, மாலை கையெழுத்திடவேண்டும் என்று நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதன்படி தினமும் கையெழுத்திட்டு வந்துள்ளார். இதனை நோட்டமிட்ட கும்பல் அவரை தீர்த்துக்கட்ட நேரம் பார்த்து காத்திருந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கார்த்திக் கையெழுத்திட்டுவிட்டு நடந்து வந்து கொண்டிருந்தார். அவருடன் நண்பர் கருவேப்பிலைக்கார தெருவை சேர்ந்த தவமணி மகன் விக்கி என்ற விக்னேஷ்பிரபு(27) என்பவரும் உடன் வந்துள்ளார். இவர்கள் கலெக்டர் அலுவலகத்தில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் அருகில் வந்தபோது அங்கு காரில் காத்திருந்த கும்பல் கார்த்திக் மீது நாட்டு வெடிகுண்டை வீசியுள்ளது. இதில் படுகாயமடைந்து நிலைகுலைந்து விழுந்த கார்த்திக் மீது சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த விக்கி அங்கிருந்து தப்பி ஓடியபோது விடாமல் விரட்டி சென்ற கும்பல் டி.ஐ.ஜி. வீட்டின் அருகில் வழிமறித்து தாக்கினர். இதில் ரத்த வெள்ளத்தில் கைகள் துண்டாகி அவர் பரிதாபமாக பலியானார். இதன்பின்னர் மர்ம கும்பல் காரில் தப்பி சென்று நயினார்கோவில் போலீசில் சரணடைந்தனர். இவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த இரட்டை கொலை சம்பவத்தில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த கூலிப்படையினர் சிலர் ஈடுபட்டிருப்பதாக கூறப்படுகிறது. ரூ.10 லட்சம் பணம் பெற்றுக்கொண்டு ராமநாதபுரம் வந்த கூலிப்படையினர் கடந்த 4 நாட்களாக கார்த்திக்கின் நடமாட்டத்தை கண்காணித்துள்ளனர். போலீஸ் நிலையத்தில் இருந்து வெளியே வந்த நிலையில் மோட்டார் சைக்கிளை வேலைக்கு விட்டிருந்ததால் கார்த்திக் நடந்து செல்வதையும், சிறிது தூரத்தில் விக்கி வந்து சேர்ந்து கொண்டதையும் பார்த்துள்ளனர். ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு கார்த்திக் வந்ததும் முதலில் அவரையும், சாட்சியாக இருக்கக்கூடாது என்று விக்கியையும் துரத்திச்சென்று கொலை செய்துள்ளனர். இதன்பின்னர் காரில் தப்பி சென்ற 12 பேரும் கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் வைத்து இருவேறு திசையில் சென்றுள்ளனர். இதில் 5 பேர் தான் போலீசில் சரணடைந்துள்ளனர். மீதம் உள்ள 7 பேர் வேறொரு காரில் தூத்துக்குடிக்கு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.
போலீசில் சரணடைந்துள்ளவர்களில் பாஸ்கரன் என்பவர் ஏற்கனவே கொலை செய்யப்பட்ட பூமிநாதனுக்கு அண்ணன் ஆவார். முருகேசன் இவர்களது சித்தப்பா. இதேபோல ரூபன் என்பவர் விஜய்யின் அண்ணன் என்பதும், மற்றவர்கள் உறவினர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் மே மாதம் நடந்த இரட்டை கொலைக்கு பழிக்குப்பழியாக நடந்த சம்பவம் என்பது உறுதியாகி உள்ளது. பிடிபட்ட 5 பேரிடமும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனா நேரில் சென்று தீவிர விசாரணை மேற்கொண்டார். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதுகுறித்து ஓம்பிரகாஷ்மீனா கூறியதாவது:– சம்பவம் தொடர்பாக வாலாந்தரவை பகுதியை சேர்ந்த பாஸ்கரன், முருகேசன், ரூபன், அர்ஜுன், முரளி ஆகிய 5 பேரிடம் விசாரணை மேற்கொண்டதில் இரட்டை கொலை சம்பவத்தில் மேலும் 7 பேர் வரை சம்பந்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. அவர்கள் யார்?, எந்த ஊர்? என்பது குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவத்தில் பின்னால் இருந்து இயக்கியவர்கள் யார்?, பண உதவி செய்தவர்கள் யார்? என்பது குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது. இதற்காக கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், துணை போலீஸ் சூப்பிரண்டு நடராஜன், 3 இன்ஸ்பெக்டர்களை கொண்ட 3 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள் தனித்தனியாக விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யாராக இருந்தாலும் கைது செய்யப்படுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
சம்பவம் தொடர்பாக நேற்றுமுன்தினம் இரவு ராமேசுவரத்தில் இருந்து தூத்துக்குடி நோக்கி சென்ற அரசு பஸ் மீதும், மதுரை நோக்கி சென்ற அரசு பஸ் மீதும் மர்ம நபர்கள் கல்வீசி தாக்கிவிட்டு தப்பி ஓடினர். இந்த தாக்குதலில் 2 பஸ்களின் கண்ணாடிகள் சேதமடைந்தன. இந்த சம்பவம் தொடர்பாக பஸ் டிரைவர்கள் பரமக்குடி முரளிதரன், கன்னியாகுமரி முருகேசன் ஆகியோர் கேணிக்கரை போலீசில் புகார் செய்தனர். போலீஸ் இன்ஸ்பெக்டர் கலைஅரசன் வழக்குபதிவு செய்து வாலாந்தரவையை சேர்ந்த நாகார்ஜுன், கண்ணன் ஆகியோரை தேடிவருகிறார்.
இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட 2 பேரின் உடல் பிரேத பரிசோதனைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில் உண்மை குற்றவாளிகளை கைது செய்யவேண்டும், சம்பவத்தில் தொடர்புடையவர்கள் யார்? என்பதை விசாரித்து உண்மை நிலையை வெளிக்கொண்டு வரவேண்டும் என்று கோரி உடலை வாங்க மறுத்து குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் கிராமத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஆஸ்பத்திரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டதை தொடர்ந்து போலீஸ் படை குவிக்கப்பட்டது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து அவர்கள் உடலை பெற்றுக்கொண்டனர்.