கடலாடியில் சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம்; போலீசார் மீது வழக்குப்பதிவு செய்ய நீதிபதி உத்தரவு
கடலாடி போலீஸ் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்ட சிறுவன் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது வழக்குபதிவு செய்து இளைஞர் நீதிக்குழும நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி பகுதியை சேர்ந்த சிறுவன் ஒருவனை வழக்கு ஒன்றிற்காக கடலாடி போலீசார் கடந்த சில தினங்களுக்கு முன்னர் கைது செய்துள்ளனர். சிறுவனுக்கு 17 வயது ஆகியுள்ள நிலையில் 22 வயது என மாற்றி வழக்கு பதிவு செய்ததோடு போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணையின்போது கடுமையாக தாக்கியதாக கூறப்படுகிறது. இதன்பின்னர் காயத்தை மறைத்து மருத்துவ பரிசோதனை அறிக்கை பெற்று முதுகுளத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்து விட்டார்களாம்.
இதனை தொடர்ந்து சிறுவனின் வக்கீல் மூலமாக வயது சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு ராமநாதபுரம் இளைஞர் நீதிக்குழுமத்தில் கடந்த 12–ந்தேதி ஆஜர்படுத்தப்பட்டான். நீதித்துறை நடுவர் மன்றம் எண்–1 நீதிபதியும், இளைஞர் நீதிக்குழும தலைவருமான இசக்கியப்பன் தலைமையில் நடைபெற்ற விசாரணையின்போது சிறுவன் தனக்கு போலீசார் தாக்கியதால் ஏற்பட்ட காயத்தை காட்டியுள்ளான். சிறுவனை தாக்கி காயப்படுத்தியது தொடர்பாக விசாரணைக்கு கடலாடி இன்ஸ்பெக்டர் முத்துராஜ், சப்–இன்ஸ்பெக்டர் சுந்தரபாண்டி, காவலர்கள் முத்துக்குமார், சரவணக்குமார் ஆகியோர் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டார்.
இதன்படி நடைபெற்ற விசாரணையின்போது இன்ஸ்பெக்டர் முத்துராஜ் தேனி மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டாக பதவி உயர்வில் சென்றதால் ஆஜராகவில்லை. மற்றவர்கள் சிறுவனின் குற்றச்சாட்டை மறுத்துள்ளனர். சிறுவனுக்கு உடலில் ஏற்பட்டுள்ள காயங்களை கருத்தில் கொண்டு உடனடியாக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் முழு உடல் பரிசோதனை செய்து அறிக்கை அளிக்கவும், தேவையான மருத்துவ உதவிகள் அளிக்கவும் உத்தரவிடப்பட்டது. மேலும், சிறுவன் மீது நடந்த தாக்குதல் அத்துமீறல் குறித்து சம்பந்தப்பட்ட கடலாடி போலீஸ் நிலைய அதிகாரி உடனடியாக இதில் தொடர்புடைய இன்ஸ்பெக்டர் உள்ளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து அதன் நகலை சம்பந்தப்பட்ட கோர்ட்டிற்கும், இளைஞர் நீதிக்குழுமத்திற்கும் அனுப்பி வைக்க நீதிபதி இசக்கியப்பன் உத்தரவிட்டார்.
மேலும், சிறுவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விசாரணை செய்து அறிக்கை அளிக்கவும் உத்தரவிட்டார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ்மீனாவிடம் கேட்டபோது, விசாரணை தொடர்பான இளைஞர் நீதிக்குழும உத்தரவு அறிக்கை இதுவரை கிடைக்க பெறவில்லை. கிடைத்ததும் உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கப்படும் என்றார்.