ஆட்டோ கடனுக்கு பரிந்துரைக்க ரூ.3,200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது : புரோக்கரும் சிக்கினார்


ஆட்டோ கடனுக்கு பரிந்துரைக்க ரூ.3,200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது : புரோக்கரும் சிக்கினார்
x
தினத்தந்தி 18 Oct 2018 3:30 AM IST (Updated: 18 Oct 2018 1:06 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல்லில் மானிய விலையில் ஆட்டோ வாங்க, வங்கி கடன் உதவி பெற பரிந்துரை செய்வதற்கு ரூ.3,200 லஞ்சம் வாங்கிய தாட்கோ மேலாளர் கைது செய்யப்பட்டார். அவருக்கு உதவியாக இருந்த புரோக்கரும் சிக்கினார்.

நாமக்கல், 

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தை சேர்ந்தவர் கணேசன் (வயது 46). இவர் பயணிகள் ஆட்டோவை மானிய கடன் உதவியுடன் வாங்க நாமக்கல் மாவட்ட தாட்கோ அலுவலகத்திற்கு ஆன்-லைனில் விண்ணப்பம் செய்து இருந்தார்.

இந்த விண்ணப்பத்தை பரிசீலனை செய்த நாமக்கல் மாவட்ட தாட்கோ மேலாளர் சக்திவேல் (40) கடந்த 12-ந் தேதி கணேசனை நேர்முக தேர்வுக்கு அழைத்தார். நேர்முக தேர்வில் கணேசன் தேர்ச்சி பெற்றார்.

இதை தொடர்ந்து கணேசனுக்கு மானியத்துடன் கடன் உதவி வழங்க, வங்கிக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப மேலாளர் சக்திவேல் அவரிடம் ரூ.3,200 லஞ்சம் கேட்டுள்ளார். அந்த பணத்தை கொடுக்க விரும்பாத கணேசன் இதுகுறித்து நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து அவர்களின் ஆலோசனைப்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.3,200-ஐ நேற்று மாலை நாமக்கல் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தாட்கோ அலுவலகம் வந்து, அங்கிருந்த புரோக்கர் பொட்டணத்தை சேர்ந்த வரதராஜன் (50) என்பவரிடம் கணேசன் கொடுத்துள்ளார். வரதராஜன் அந்த பணத்தை மேலாளர் சக்திவேலிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்து இருந்த இன்ஸ்பெக்டர் நல்லம்மாள் தலைமையிலான லஞ்ச ஒழிப்பு போலீசார் மேலாளர் சக்திவேல் மற்றும் புரோக்கர் வரதராஜன் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.

மேலும் தாட்கோ அலுவலகத்திலும் சோதனை நடத்தினர். இந்த சம்பவம் நேற்று நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Next Story