நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் பேட்டி


நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் பேட்டி
x
தினத்தந்தி 18 Oct 2018 4:30 AM IST (Updated: 18 Oct 2018 1:19 AM IST)
t-max-icont-min-icon

நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படத்தை திரையிட மாட்டோம் என்று திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் அறிவித்துள்ளனர்.

திருச்சி,

நடிகர் விஷால் நடித்துள்ள சண்டக்கோழி-2 நாளை (அதாவது இன்று) திரையரங்குகளில் வெளியிடப்பட இருந்தது. ஆனால் நடிகர் விஷாலின் படத்தை திரையிட மறுத்து திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் முடிவு செய்துள்ளனர்.அதன்படி திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கரூர், புதுக்கோட்டை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 40 திரையரங்குகளில் நடிகர் விஷாலின் சண்டக்கோழி-2 படம் திரையிடப்படுவதில்லை.

திருட்டு வி.சி.டி. தயாரிக்க திரையரங்கு உரிமையாளர்கள் உதவுவதாக நடிகர் விஷால் குற்றம்சாட்டி உள்ளார். மேலும் திருட்டு வி.சி.டி. தொடர்பாக கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருந்து வருகிறது. குறிப்பிட்ட 10 திரையரங்குகளில் திருட்டு வி.சி.டி. தயாரிக்கப்படுவதாகவும், அந்த தியேட்டர்களுக்கு புதிய திரைப்படம் வழங்கப்படுவதில்லை என தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் நடிகர் விஷால் தலைமையில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

கோர்ட்டில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது நடவடிக்கை எடுத்தது தவறு. மேலும் திருட்டு வி.சி.டி. தயாரிக்க திரையரங்கு உரிமையாளர்கள் ஒரு போதும் துணையாக இருந்ததில்லை. புதிய படம் வெளியாகும் போது அந்த படத்தின் தரப்பில் ஒருவர் தியேட்டரில் பணியில் இருப்பது உண்டு. அவர்களுக்கு நிலைமை தெரியும். படம் பார்க்க வருபவர்கள் தற்போது நவீன தொழில்நுட்பத்தில் கேமராவை பேனா உள்ளிட்ட எதில் வேண்டுமானாலும் வைத்து கொண்டு வருகின்றனர்.

அதில் திருட்டுத்தனமாக படத்தை பதிவு செய்வதை நாங்கள் எப்படியும் தடுக்க முடியும். எனவே புதுப்படம் கொடுக்க மறுத்த 10 திரையரங்குகள் விவகாரத்தில் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணவேண்டும். அதன்பின் தான் நடிகர் விஷாலின் படம் திரையிடப்படும். ஆன்-லைனில் டிக்கெட் முன்பதிவு செய்தவர்களுக்கு கட்டணம் திருப்பி வழங்கப்படும்.

இவ்வாறு கூறினர்.

Next Story