குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யக்கோரி வழக்கு: மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ஒரு கடையை காலியாக வைத்திருக்க வேண்டும் ஐகோர்ட்டு உத்தரவு
மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் ஒரு கடையை காலியாக வைத்திருக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
மதுரை,
மதுரை கோ.புதூரை சேர்ந்த முனீஸ்வரன் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில், நான் மதுரை சிம்மக்கல் பகுதியில் 20 ஆண்டுகளாக பழக்கடை வைத்துள்ளேன். சிம்மக்கல் பழக்கடை மொத்த வியாபாரிகள் சங்கத்தில் உறுப்பினராக இருக்கிறேன். இங்குள்ள பழக்கடைகளை மாற்ற நடவடிக்கை எடுத்த மாநகராட்சி, இரு சங்கங்களை சேர்ந்த 240 உறுப்பினர்களுக்கு மாட்டுத்தாவணி மார்க்கெட்டில் கடைகள் ஒதுக்கீ செய்யப்படும் என அறிவித்தது. சங்கங்களின் சார்பில் தங்களது பங்களிப்பாக ரு11.84 கோடி மாநகராட்சிக்கு கொடுக்கப்பட்டது. சங்க உறுப்பினர்களிடம் தலா ரூ.2½ லட்சம் வசூலிக்கப்பட்டது. உறுப்பினர்களுக்கான கடைகளை குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்வதென முடிவானது.
மாட்டுத்தாவணியில் புதிதாக கட்டப்பட்டுள்ள பழ மார்க்கெட்டில் கடைகளை, சங்கங்களின் உறுப்பினர்களுக்கு குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்ய கோரிய வழக்கில் சட்டத்திற்கு உட்பட்டு பரிசீலித்து 6 வாரத்திற்குள் மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோர்ட்டு உத்தரவிடப்பட்டது. ஆனாலும் இதுதொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நான் தொடர்ந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நிலுவையில் உள்ளது. இந்தநிலையில் என்னை தவிர்த்து மற்றவர்களுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற உத்தரவை பின்பற்றவில்லை. எனவே குலுக்கல் முறையில் ஒதுக்கீடு செய்யவும், எனக்கு ஒரு கடையை ஒதுக்கவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி சுந்தர், மாட்டுத்தாவணி பழ மார்க்கெட்டில் மாநகராட்சி தரப்பில் ஒரு கடையை காலியாக வைத்திருக்க வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தார்.