மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரபு பாட சாலை ஆசிரியருக்கு 21 ஆண்டு சிறை - திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு


மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு: அரபு பாட சாலை ஆசிரியருக்கு 21 ஆண்டு சிறை - திருப்பூர் மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு
x
தினத்தந்தி 18 Oct 2018 3:30 AM IST (Updated: 18 Oct 2018 1:54 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மாணவிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த வழக்கில் அரபு பாட சாலை ஆசிரியருக்கு 21 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கூறப்பட்டது.

திருப்பூர், 

திருப்பூர் அண்ணாநகர் தியாகி குமரன் காலனியை சேர்ந்தவர் காதர்மொய்தீன்(வயது 63). இவர் திருமுருகன்பூண்டி பகுதியில் அரபு பாட சாலையில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். இவரிடம் முஸ்லிம் மாணவ-மாணவிகள் படித்து வந்தார்கள். கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை மாதம் முதல் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் வரை உள்ள காலத்தில் தன்னிடம் படிக்க வந்த மாணவிகளில் 9 வயது, 11 வயது மாணவிகள் 2 பேரை தனியாக அழைத்துச்சென்று காதர்மொய்தீன் பலமுறை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்துள்ளார்.

இது குறித்து அந்த சிறுமிகள் தனது பெற்றோரிடம் தெரிவிக்க, அவர்கள் அளித்த புகாரின் பேரில் திருப்பூர் வடக்கு அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதர்மொய்தீனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது. சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், பலமுறை மிரட்டி பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும், மாணவிகளை பாதுகாக்கும் பொறுப்பில் உள்ளவர் பாலியல் தொந்தரவு செய்த குற்றத்துக்கு 7 ஆண்டு கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.20 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ஜெயந்தி தீர்ப்பு கூறினார். இந்த வழக்கில் அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் பரிமளா ஆஜராகி வாதாடினார். 

Next Story