கவர்னரின் காரை வழிமறித்து மாணவர்கள் திடீர் போராட்டம்; சட்டக்கல்லூரியில் பரபரப்பு


கவர்னரின் காரை வழிமறித்து மாணவர்கள் திடீர் போராட்டம்; சட்டக்கல்லூரியில் பரபரப்பு
x
தினத்தந்தி 18 Oct 2018 5:00 AM IST (Updated: 18 Oct 2018 2:16 AM IST)
t-max-icont-min-icon

புதுவை சட்டக்கல்லூரியில் கவர்னரின் காரை வழிமறித்து மாணவர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

காலாப்பட்டு,

புதுச்சேரி தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவனங்களில் மழைநீர் சேகரிப்பு வசதி செய்யப்பட்டுள்ளதா? என்று கவர்னர் கிரண்பெடி ஆய்வு செய்து வருகிறார். நேற்று காலை காலாப்பட்டில் உள்ள சட்டக்கல்லூரிக்கு சென்றார். அங்கு கல்லூரி முதல்வர் மற்றும் பேராசிரியர்களை சந்தித்து மழைநீர் சேமிப்பு அமைப்பு குறித்து பேசினார். பின்னர் அவர் கல்லூரியில் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது கல்லூரியில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாமல் இருப்பது தெரியவந்தது. இதன்பின் கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டார். அப்போது கல்லூரி மாணவர்கள் அவரை சந்தித்து கல்லூரியிலும், விடுதியிலும் அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

உடனே கவர்னர் கிரண்பெடி அவர்களிடம், கவர்னர் மாளிகைக்கு வந்து தன்னை சந்தித்து புகார் அளிக்குமாறு கூறினார். இதனால் ஆத்திரம் அடைந்த மாணவர்கள் திடீரென கவர்னரின் காரை வழிமறித்தனர். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினர்.

ஒரு சில மாணவர்கள் சட்டக்கல்லூரியின் நுழைவாயிலை பூட்டி அப்படியே கீழே அமர்ந்து திடீரென போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை அங்கிருந்த போலீசார் அப்புறப்படுத்தினர். கவர்னர் கிரண்பெடி அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு சென்றார். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக கவர்னர் மாளிகை வெளியிட்டுள்ள செய்தியில், ‘இது போன்ற சம்பவங்கள் எதுவும் நடைபெறவில்லை. மாணவர்கள் தங்கள் குறைகளை தமிழில் எழுதி கொண்டு வந்தனர். இதனை பார்த்த கவர்னர் கிரண்பெடி அவர்களிடம் உங்கள் குறைகளை ஆங்கிலத்தில் எழுதி அதனை கவர்னர் மாளிகையில் எடுத்து வந்து தன்னை சந்தித்து புகார் தெரிவிக்கலாம் என்று மாணவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. வேறு எதுவும் நடைபெறவில்லை’ என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே புதுவை அரசு சட்டக்கல்லூரி மாணவர் சங்க நிர்வாகிகள் சிலர் நேற்று மாலை கவர்னர் மாளிகையில், கவர்னர் கிரண்பெடியை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர். அதில் சட்டக்கல்லூரி மற்றும் விடுதிக்கு குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என்று வலியுறுத்தினர்.

மனுவை பெற்றுக்கொண்ட கவர்னர் கிரண்பெடி, இந்த புகார் தொடர்பாக நடவடிக்கை எடுத்து மாதந்தோறும் அறிக்கை அனுப்பும்படி கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டார்.


Next Story