நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி


நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை: குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு - விவசாயிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 17 Oct 2018 10:00 PM GMT (Updated: 17 Oct 2018 8:53 PM GMT)

நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் குண்டேரிப்பள்ளம் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டி.என்.பாளையம், 

கோபிசெட்டிபாளையம் அருகே கொங்கர்பாளையம் மலை அடிவாரத்தில் குண்டேரிப்பள்ளம் அணை உள்ளது. அணையின் மொத்த நீர்மட்ட உயரம் 42 அடியாகும். அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக குன்றி, விளாங்கோம்பை, கம்பனூர், மல்லியம்மன்துர்க்கம் ஆகிய பகுதிகள் உள்ளன. கடந்த மாதம் நீர்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

இதனால் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதன்காரணமாக அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்ததோடு, அதன் முழுக்கொள்ளளவையும் எட்டியது. மேலும் அணையில் இருந்து உபரிநீர் வெளியேறியது.

அணையில் இருந்து தொடர்ந்து உபரிநீர் வெளியேற்றம் மற்றும் மழை நின்றதால் அணையின் நீர்மட்டம் சரிந்தது. இந்தநிலையில் குன்றி, விளாங்கோம்பை, மல்லியம்மன் துர்க்கம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு கனமழை பெய்தது. இதனால் நேற்று முன்தினம் இரவு அணைக்கு வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடி நீர் வந்தது. இதைத்தொடர்ந்து குண்டேரிப்பள்ளம் அணை அதன் முழுக்கொள்ளளவை மீண்டும் எட்டியது.

தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், அணையில் இருந்து உபரிநீர் வெளியேற்றப்படுவதாலும் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர். 

Next Story