30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் மறியல்; 94 பேர் கைது


30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் மறியல்; 94 பேர் கைது
x
தினத்தந்தி 17 Oct 2018 11:00 PM GMT (Updated: 17 Oct 2018 9:44 PM GMT)

30 அம்ச கோரிக்கை களை வலியுறுத்தி ரேஷன்கடை பணியாளர்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் 94 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்,

பொது வினியோகத் திட்டத்திற்கென தனித்துறை அமைக்க வேண்டும். கூட்டுறவுத்துறை ரேஷன்கடை பணியாளர்களுக்கு நுகர்பொருள் வாணிபக்கழக பணியாளர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். அத்தியாவசியப் பொருட்கள் அனைத்தையும் பொட்டலமாக வழங்க வேண்டும். ரேஷன்கடைகளில் பணியாளர்களின் முன்பு கட்டுப்பாட்டு பொருட்கள் அனைத்தையும் எடையிட்டு வழங்க வேண்டும்.

பொதுவினியோக திட்டப்பணிகள் முழுவதும் பயோமெட்ரிக், டிஜிட்டல் ரேஷன்கார்டு வழங்குதல் உள்ளிட்டு பயோமெட்ரிக் மின்னணு குடும்ப அட்டை வழங்குதல் உள்ளிட்ட அனைத்தையும் 100 சதவீதம் கணினி மயமாக்க வேண்டும். பணிவரன் செய்யப்படாத பணியாளர்களை எவ்வித நிபந்தனையும் இன்றி பணிவரன் செய்ய வேண்டும். ரேஷன்கடை பணியாளர்கள் அவர்கள் வாங்கும் கடைசி மாத ஊதியத்தில் சரிபாதியை ஓய்வூதியமாக வழங்க வேண்டும். கட்டுப்பாடற்ற பொருட்களை விற்பனை செய்ய நிர்ப்பந்தம் செய்ய கூடாது என்பன உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ரேஷன்கடை பணியாளர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

அதன்படி தஞ்சை மாவட்டத்திலும் ரேஷன்கடை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். போராட்டத்தில் ஈடுபட்ட அவர்கள் கடந்த 2 நாட்களாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று அவர்கள் தஞ்சை மருத்துவகல்லூரி சாலையில் உள்ள கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்துக்கு தஞ்சை மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சுப்பிரமணியன், பொருளாளர் ராமலிங்கம், மாநில இணை செயலாளர் ராமலிங்கம், மாவட்ட துணைத் தலைவர் இளவரசன், மாவட்ட இணை செயலாளர் சுந்தரேசன், தஞ்சை வட்ட தலைவர் அறிவழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில தலைவர் ராமச்சந்திரன் போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

மறியல் போராட்டத்தையொட்டி அங்கு போலீசாரும் குவிக்கப்பட்டு இருந்தனர். இதையடுத்து மறியலில் ஈடுபட்ட 34 பெண்கள் உள்பட 94 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story