மத்திய அரசு திட்டங்கள் குறித்து இ-சேவை மைய இயக்குனர்களுக்கு பயிற்சி முகாம்
மத்திய அரசின் திட்டங்கள் குறித்து இ-சேவை மைய இயக்குனர்களுக்கு பயிற்சி அளிக் கும் முகாம் தர்மபுரியில் நடைபெற்றது.
தர்மபுரி,
மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்து இ-சேவை மையங்கள் மூலமாக பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக மத்திய அரசின் காப்பீட்டு திட்டங்களை செயல்படுத்தும் முறைகள் குறித்து இ-சேவை மைய இயக்குனர்களுக்கான பயிற்சி முகாம் தர்மபுரியில் நடைபெற்றது.
இந்த பயிற்சி முகாமிற்கு கிராமப்புற தொழில் முனைவோர் நல சங்க தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். சங்க செயலாளர் பெருமாள், பொருளாளர் ராமமூர்த்தி, நிர்வாகிகள் இம்ரான் பாஷா, நல்லதம்பி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இ-சேவை மைய மாநில ஒருங்கிணைப்பாளர் கமலேசன், பிரதம மந்திரியின் கிராமின் டிஜிட்டல் திட்ட மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மாதவன் மயில்சாமி ஆகியோர் இந்த பயிற்சியின் நோக்கம் குறித்து விளக்கி பேசினார்கள்.
மத்திய அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் ரூ.5 லட்சம் காப்பீடு வழங்கும் திட்டத்தை கிராமப்புறங்களில் உள்ள அனைத்து குடும்பங்களுக்கும் கொண்டுபோய் சேர்க்கும் வழிமுறைகள், பயனாளிகளை கண்டறிந்து பதிவு செய்தல், பதிவுகளில் பிழைகள் இருந்தால் சரிசெய்யும் வழிமுறைகள் குறித்து இந்த முகாமில் விரிவாக பயிற்சி அளிக்கப்பட்டது.
பயனாளிகளுக்கு பிரதம மந்திரியின் காப்பீடு திட்ட அடையாள அட்டைகளை வழங்கும் முறைகள், இந்த திட்டம் மூலம் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் மதிப்பிலான மருத்துவ சிகிச்சைகளை அனைத்து மாநிலங்களிலும் பெறும் வசதி ஆகியவை குறித்தும் விளக்கப்பட்டது.
இந்த முகாமில் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள கிராமப்புற தொழில் முனைவோர்கள், சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட நிர்வாகி சிவசண்முகம் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story