காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் ஆய்வு
காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
காங்கேயம்,
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளில் ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்ட பணிகள் மற்றும் ஊராட்சி பகுதிகளில் கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி ஆய்வு செய்தார்.
இதன் பின்னர் அவர் கூறியதாவது:-
திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறையின் சார்பில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 13 ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 265 கிராம ஊராட்சி பகுதிகளில் பல்வேறு வகையான வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தடுப்பணைகள் கட்டப்பட்டு வருகின்றன. தடுப்பணைகள் அமைப்பதால் ஓர் இடத்தில் நீர் பரவலாக தேக்கி வைக்கப்படுகிறது.
இதன் காரணமாக அதன் சுற்றுப்புறங்களில் உள்ள கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் உயர்கிறது. மழையின் காரணமாக அபரிமிதமாக வரும் வெள்ளமும் கட்டுப்படுத்தப்பட்டு, ஓர் இடத்தில் தேக்கி வைக்கப்படுகிறது. மேலும், நீரோட்டமும் சீராக செல்லவும் உதவுகிறது. விளை நிலங்களுக்கு ஏற்படும் பாதிப்பும் இதன் மூலம் தடுக்கப்படுகிறது. திருப்பூர் மாவட்டத்தில் 2018-2019-ம் ஆண்டிற்கு 272 கான்கிரீட் தடுப்பணைகள், 80 கருங்கற்களான தடுப்பணைகள் துரிதமாக கட்டப்பட்டுள்ளன.
தற்போது பெய்து வரும் பருவ மழையால் புதிதாக கட்டப்பட்டுள்ள தடுப்பணைகளால் கிராம புறங்களில் உள்ள கிணறுகளில் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்துள்ளது. இதன் மூலம் விவசாயிகள் பலர் பயனடைந்துள்ளனர். மேலும், கிராம புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு தடுப்பணைகள் தேவை இருந்தால் கிராம ஊராட்சி அலுவலகம், ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை ஆகிய அலுவலகங்களை அணுகி பயன்பெறலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
முன்னதாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ், காங்கேயம் ஊராட்சி ஒன்றியம், கணபதிபாளையம் ஊராட்சி சிவகிரி புதூர், கரியான் தோட்டம் பகுதிகளில் ரூ.6 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை, கணபதிபாளையம் ஊராட்சி சிவகிரி புதூரில் ரூ.1 லட்சத்து 4 ஆயிரம் மதிப்பில் 820 மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள மண்வரப்பு அமைக்கும் பணி மற்றும் சிவன்மலை ஊராட்சி அரசம்பாளையத்தில் கட்டப்பட்டு வரும் தடுப்பணை உள்ளிட்டவைகளை கலெக்டர் ஆய்வு செய்தார்.
இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் ரமேஷ்குமார், ஊரக வளர்ச்சிதுறையின் செயற்பொறியாளர் செல்வகுமரன், காங்கேயம் வட்டார வளர்ச்சி அலுவலர் பாலமுருகன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) வீரமலை, உதவி பொறியாளர்கள் சரவணக்குமார், யோகேஷ்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story