தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்


தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு மந்திரி சபை ஒப்புதல்
x
தினத்தந்தி 17 Oct 2018 11:06 PM GMT (Updated: 17 Oct 2018 11:06 PM GMT)

80 சதவீத தனியார் முதலீட்டுடன் தாராவியை சீரமைக்கும் புதிய திட்டத்திற்கு மராட்டிய மந்திரி சபை ஒப்புதல் அளித்து உள்ளது.

மும்பை,

தாராவி ஆசியாவின் மிகப்பெரிய குடிசை பகுதி ஆகும். இதை சீரமைக்க அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தும் அவை தோல்வியில் தான் முடிகின்றன. கடைசியாக செக்டார் திட்டத்தின் கீழ் தாராவியை சீரமைக்க திட்டமிடப்பட்டு இருந்தது. இந்தநிலையில் அந்த திட்டம் கைவிடப்பட்டதாக கூறப்படுகிறது.

தற்போது மாநில மந்திரி சபை தாராவியை சீரமைக்க புதிய திட்டத்திற்கு (எஸ்.வி.பி.) ஒப்புதல் அளித்துள்ளது. இந்த திட்டத்தின்படி தாராவி ரூ.22 ஆயிரம் கோடி செலவில் சீரமைக்கப்பட உள்ளது.

இந்த திட்டத்திற்கு 20 சதவீத முதலீட்டை மாநில அரசும், மீதமுள்ள 80 சதவீத முதலீட்டை தனியாரும் வழங்குகின்றன. இந்த புதிய திட்டத்தின் கீழ் தாராவியில் குடிசைகளில் வசிக்கும் 59 ஆயிரத்து 160 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டி கொடுக்கப்படும். 12 ஆயிரத்து 976 வணிக அமைப்புகள் வேறு பகுதிக்கு மாற்றப்பட உள்ளன.

மாநில அரசின் இந்த திட்டம் குறித்து தாராவி பச்சாவ் அந்தோலன் தலைவர் பாபுராவ் மானே கூறுகையில், ‘‘தாராவி சீரமைப்பிற்காக மிகப்பெரிய அளவில் விடப்படும் டெண்டர்கள் தோல்வியில் தான் முடிகின்றன. இந்த திட்டமும் தோல்வியை தான் தழுவும். சிறிய சிறிய பகுதிகளாக தாராவி குடிசைப்பகுதிகளை சீரமைக்க வேண்டும்’’ என்றார்.

இது குறித்து மற்றொரு தரப்பினர் கூறுகையில், தேர்தல் நெருங்குவதை கருத்தில் கொண்டு மக்களை ஏமாற்ற அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த 4 ஆண்டுகளாக தாராவி சீரமைப்பு திட்டத்திற்காக அரசு எதுவும் செய்யவில்லை’’ என்றனர்.

Next Story