வாகன விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு - ஆரணியில் போலீசார் அதிரடி நடவடிக்கை


வாகன விதிமீறல் தொடர்பாக ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு - ஆரணியில் போலீசார் அதிரடி நடவடிக்கை
x
தினத்தந்தி 18 Oct 2018 4:38 AM IST (Updated: 18 Oct 2018 4:38 AM IST)
t-max-icont-min-icon

வாகன விதிமீறல் தொடர்பாக, ஒரே நாளில் 200 வழக்குகள் பதிவு செய்து ஆரணியில் போலீசார் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

ஆரணி,

ஆரணி பகுதியில் போலீசார் நேற்று முன்தினம் நகரின் பல்வேறு பகுதிகளில் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் மேற்பார்வையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பேபி, சாலமோன்ராஜா, சப்-இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஜமீஸ்பாபு, தரணி, கோவிந்தசாமி மற்றும் போலீசார் பல்வேறு குழுக்களாக இந்த தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது குடிபோதையில் வாகனம் ஓட்டியது, உரிமம் இல்லாமல் வாகனத்தை இயக்கியது, 2 பேருக்கு மேல் மோட்டார்சைக்கிளில் பயணம் செய்தது, அதிக பாரம் ஏற்றியது, அதிக புகையை கக்கியபடி சென்றது உள்பட விதிமீறல்களில் ஈடுபட்ட 200 வாகன உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அவர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதித்து வசூல் செய்யப்பட்டது.

இந்த சோதனையை அறிந்த வாகன ஓட்டிகள் வேறு வழியாக சென்று தப்பலாம் என நினைத்து சென்றனர். ஆனால் அவர்கள் எந்த பகுதியில் சென்றாலும் தப்ப முடியாதபடி போலீசார் அனைத்து பகுதியிலும் சோதனை நடத்தியதில் இதுபோன்ற விதிமீறல்களில் ஈடுபட்டவர்கள் சிக்கினர். இதுபோன்ற சோதனைகள் அடிக்கடி நடத்தப்பட்டு விதிமீறல்களில் ஈடுபடுவோர் மீது அபராதம் விதிக்கப்படும் என துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில் தெரிவித்தார்.


Next Story