அமைச்சர் கே.சி.வீரமணியை ‘வாட்ஸ்அப்’பில் அவதூறாக விமர்சனம் - அ.ம.மு.க.வை சேர்ந்தவர் மீது வழக்கு


அமைச்சர் கே.சி.வீரமணியை ‘வாட்ஸ்அப்’பில் அவதூறாக விமர்சனம் - அ.ம.மு.க.வை சேர்ந்தவர் மீது வழக்கு
x
தினத்தந்தி 18 Oct 2018 5:42 AM IST (Updated: 18 Oct 2018 5:42 AM IST)
t-max-icont-min-icon

அமைச்சர் கே.சி.வீரமணியை ‘வாட்ஸ்அப்’பில் அவதூறாக விமர்சனம் செய்த அ.ம.மு.க.வை சேர்ந்தவர் மீது வழக்குபதிவு செய்யப்பட்டுள்ளது.

வேலூர்,

வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி பகுதியை சேர்ந்த அ.தி.மு.க.மகளிரணி நிர்வாகி ஒருவரின் செல்போனுக்கு கடந்த 13-ந் தேதி ‘வாட்ஸ் அப்’ மூலம் தகவல் ஒன்று வந்தது. அதனை பார்த்தபோது அமைச்சர் கே.சி.வீரமணியை பற்றி மிகவும் அவதூறான வார்த்தைகளில் தகவல் பரப்பப்பட்டிருந்தது. அது குறித்து அவர் ஜோலார்பேட்டை அ.தி.மு.க.ஒன்றிய செயலாளர் ஆ.ரமேசுக்கு தகவல் அளித்தார்.

‘வாட்ஸ் அப்’பில் அனுப்பியவர் எண்ணை பார்த்தபோது அந்த எண் புத்துக்கோவிலை சேர்ந்த அ.ம.மு.க.வை சேர்ந்த சேகர் என்பது தெரியவந்தது. அவர் மீது ஜோலார்பேட்டை போலீஸ் நிலையத்தில் ஒன்றிய செயலாளர் ரமேஷ் புகார் அளித்தார். அதில் ஒன்றிய அ.ம.மு.க.செயலாளர் இளங்கோ தூண்டுதலின்பேரில் சேகர் இவ்வாறு ‘வாட்ஸ்அப்’பில் அவதூறு பரப்பியதாக தெரிவித்திருந்தார். அதன்பேரில் சேகர் மீது ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து மேல் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story