ரெயில் நூலகம்
நீண்டதூரம் ரெயிலில் பயணிப்பவர்களில் பலர் புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
நீண்டதூரம் ரெயிலில் பயணிப்பவர்களில் பலர் புத்தகம் வாசிக்கும் பழக்கம் கொண்டவர்களாக இருப்பார்கள். ஆனால் சமீபகாலமாக ரெயில்களில் புத்தகங்கள் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டு வருகிறது. ஸ்மார்ட்போன்கள் பெரும்பாலானோரின் பொழுதுபோக்காக மாறிக்கொண்டிருக்கின்றன. இந்தநிலையில் புத்தகப்பிரியர்களிடமும், பயணிகளிடமும் புத்தகம் வாசிக்கும் பழக்கத்தை அதிகரிக்கும் நோக்கில் இந்திய ரெயில்வே புதிய முயற்சி மேற்கொண்டுள்ளது. நீண்டதூரம் செல்லும் ரெயில்களில் முதல் முறையாக ‘புக்ஸ் ஆன் வீல்ஸ்’ என்ற ரெயில் நூலகம் தொடங்கப்பட்டிருக்கின்றது. இந்த திட்டம் நீண்ட தூர பயணத்தை மறக்க முடியாத அனுபவம் மட்டுமல்லாது, மனம் நெகிழும் கருத்துகளாலும் நிரப்ப இருக்கிறது.
இந்த புக்ஸ் ஆன் வீல்ஸ் நூலகம் பரிசோதனை முயற்சியாக டெக்கான் குயின் மற்றும் பஞ்சாவதி எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரெயில்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில் டெக்கான் குயின் ரெயில் மும்பை-புனே இடையேயும், பஞ்சாவதி ரெயில் மும்பை - மன்மத் இடையேயும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் ஒவ்வொன்றிலும் 250-300 புத்தகங்கள் பயணிகள் எடுத்து படிக்கும் வகையில் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. தற்போது அரசியல், வரலாறு, பிறமொழிகளில் இருந்து மொழிபெயர்க்கப்பட்ட மராத்தி மொழி புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. பயணிகள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பை பொறுத்து அதிக புத்தகங்கள் இடம்பெற இருக்கின்றன.
இந்த நகரும் நூலகத்தை நிர்வகிக்க இரண்டு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் புத்தகங்கள் அடங்கிய அலமாரியை தள்ளிக் கொண்டு ஒவ்வொரு பெட்டியாக செல்வார்கள். புத்தகம் படிக்க விரும்பும் பயணிகள் தங்களுக்கு பிடித்தமான புத்தகத்தை எடுத்துக்கொள்ளலாம். அவர்களின் இருக்கை எண், பி.என்.ஆர். எண் போன்றவை குறித்துவைத்துக்கொள்ளப்படும். படித்து முடித்தவுடனோ அல்லது பயணம் முடியும் முன்னோ புத்தகத்தினை ஒப்படைத்து விடவேண்டும். இதற்கு எந்த கட்டணமும் கிடையாது. அடுத்து இந்ததிட்டம் நீண்ட தூரம் செல்லும் பிற ரெயில்களிலும் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
Related Tags :
Next Story