‘வேலைக்கார’ மாடல் அழகி
வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி, மாடல் அழகியாக வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார்.
வீட்டு வேலை செய்து கொண்டிருந்த பெண்மணி, மாடல் அழகியாக வாழ்க்கையில் உயர்ந்திருக்கிறார். விதவிதமான ஆடைகளில் இவர் தோன்றும் காட்சிகள் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன. அவர் பெயர் கமலா. இரண்டு குழந்தைகளின் தாய்.
அவரை மாடல் அழகியாக உருமாற்றியவர் மந்தீப் நாகி. பிரபல ஆடை வடிவமைப்பாளரான இவர், புதிய ஆடை ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு மாடல் அழகியை தேடிக்கொண்டிருந்தார். வழக்கமான மாடல் அழகியாக இல்லாமல் இருக்க வேண்டும். அப்போதுதான் எளிதாக அனைத்து தரப்பு பெண்களையும் அந்த ஆடை சென்றடையும் என்று எதிர்பார்த்தார். அவருடைய எதிர்பார்ப்புக்கு ஏற்ப கமலா தோற்றமளித்தார்.
மந்தீப் டெல்லியை சேர்ந்தவர். அவர் வசிக்கும் பகுதியில் கமலா வீட்டு வேலை செய்து வந்ததால் அவரை அடிக்கடி பார்த்திருக்கிறார். கமலாவிடம் மாடல் அழகியாக ஒரு ஆடைக்கு போஸ் கொடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். ஆரம்பத்தில் தயங்கிய கமலா பின்னர் ஒப்புக்கொண்டுவிட்டார்.
‘‘தொழில்முறை மாடல் அழகிகளை விட சாதாரண பெண்கள் எந்த எதிர்ப்பார்ப்பும் இல்லாமல் கேமரா முன்பு வந்து நிற்பார்கள். அவர்களின் முக பாவனைகளில் பல போஸ்களை எதிர்பார்க்கலாம். அவர்களிடம் தயக்கம் வெளிப்பட்டாலும் கேமராவிற்கு முன்னால் வலுவானவர்களாக தோன்றுவார்கள். எல்லா பெண்களுமே விதவிதமாக உடைகள் உடுத்துவதற்கு ஆசைப்படுவார்கள். நான் கமலாவை அணுகி எங்கள் திட்டத்தை விளக்கியபோது சற்று தயங்கினார். இரண்டு குழந்தை களுக்கு தாயான தன்னால் மாடல் அழகியாக போஸ் கொடுக்க முடியுமா? என்று யோசித்தார். அவருக்கு தைரியம் கொடுத்து புதிய ஆடைகளை அறிமுகப்படுத்த வைத்துவிட்டோம்’’ என்கிறார்.
மந்தீப் மாடல் அழகிகள் அல்லாமல் குடும்ப பெண்களை தேர்ந்தெடுத்து மாடலிங் செய்ய வைப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். கமலாவைபோல் ஏராளமான பெண்களை மாடல் உலகத்திற்கு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறார்.
Related Tags :
Next Story