பெண்கள் நலன் காக்கும் மங்கை
கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்களில் 50 சதவீதம் பேர் ரத்த சோகை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிராமப்புற பகுதிகளில் வசிக்கும் பெண்களில் 50 சதவீதம் பேர் ரத்த சோகை பாதிப்புக்கு ஆளாகி இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது. தேசிய ஊட்டச்சத்து கண்காணிப்பு ஆணையம், இந்திய மருத்துவ கவுன்சில் ஆகியவற்றின் ஆய்வறிக்கையில் இது உறுதி செய்யப்பட்டுள்ளது. சிறுவர்-சிறுமியர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், இளம் பெண்கள் போன்றோர் ரத்த சோகைக்கு ஆளாகி வருகிறார்கள்.
குறைந்த வருமான பின்னணியை கொண்டவர்கள், ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட உணவுகளை சாப்பிடுகிறவர்கள் தான் அதிக பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்த நிலையில் ஊட்டச்சத்து குறைபாடு கொண்டவர்களுக்கு சத்துணவு கிடைப்பதற்கான முயற்சியில் ஈடுபட்டு வெற்றி பெற்றிருக்கிறார், மோனலிசா பத்கி. இவர் ஒடிசா மாநிலத்திலுள்ள சம்பல்பூர் பகுதியை சேர்ந்தவர். பி.டெக் படித்தவர் மேற்படிப்புக்காக ஆஸ்திரேலியா சென்றிருக்கிறார். அங்கு அடிலெய்டில் உள்ள பல்கலைக்கழகத்தில் பி.எச்டி முடித்துவிட்டு நாடு திரும்பியிருக்கிறார். பின்னர் தொண்டு நிறுவனத்தில் இணைந்து பெண்கள் எதிர்கொள்ளும் உடல் நலப்பிரச்சினைகள் மற்றும் மாதவிடாய் கால சிரமங்கள் பற்றி விழிப் புணர்வை ஏற்படுத்தியிருக்கிறார். அப்போதுதான் நிறைய பெண்கள் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது.
‘‘கர்ப்பிணி பெண்கள் ஊட்டச்சத்து மிக்க உணவுகளை சாப்பிடுவதில் கவனம் செலுத்துவதில்லை. அதனால் பிரசவத்திற்கு பிறகு அவர்களின் உடல் நிலையும், குழந்தையின் வளர்ச்சியும் பாதிப்புக்குள்ளாகிறது. பெண்கள் தங்கள் உடல் நலனிலும் அக்கறை காண்பிக்க வேண்டும். நான் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தில் களப்பணி மேற்கொண்டபோது பெண்களின் ஆரோக்கியம் மோசமான நிலையில் இருப்பதை பார்த்தேன். அங்குள்ள பெண்கள் வீட்டு வேலை மட்டு மின்றி விவசாய வேலை, பசுமாடுகளை பராமரித்தல் போன்ற கடுமையான பணிகளை மேற்கொள்கிறார்கள். ஆனாலும் தங்கள் உடல் உழைப்புக்கு ஏற்ற சத்தான உணவுகளை அவர்கள் சாப்பிடுவதில்லை’’ என்கிறார்.
மோனலிசா, அந்த பகுதி பெண்களின் உடல் ஆரோக்கிய நிலையை அறிந்துகொள்ள மருத்துவ முகாமுக்கு ஏற்பாடு செய்திருக்கிறார். ஏராளமான பெண்களும், குழந்தைகளும் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருப்பது தெரியவந்திருக்கிறது. அவர்களின் உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்காக ‘தகத்வாலா பவுடர்’ என்ற ஊட்டச்சத்து மாவை தயாரித்து கொடுத்திருக்கிறார். அதில் கோதுமை, பருப்பு வகைகள், நிலக்கடலை, எள், வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. அவைகளை கிராம மக்களே வறுத்து பொடித்து உபயோகப்படுத்துவதற்கும் பயிற்சி அளித்திருக்கிறார். இரும்பு சத்து அதிகம் கொண்ட அந்த ஊட்டச்சத்து மாவை பெண்கள் தினமும் 100 கிராம் அளவுக்கு சாப்பிட்டு வந்திருக்கிறார்கள். அந்த பெண்களின் உடல் நிலையில் நல்ல மாற்றம் ஏற்பட்டுள்ளது. இப்போது பல பெண்கள் குழுவாக இணைந்து ஊட்டச்சத்து மாவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அவைகளை தயாரித்து விற்பனை செய்கிறார்கள். இந்த சத்து மாவுக்கு அந்த பகுதியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
Related Tags :
Next Story