விழுப்புரத்தில் பரபரப்பு: பணம் வைத்து சூதாடிய அரசு அதிகாரி உள்பட 9 பேர் கைது : ரூ.2 லட்சம் பறிமுதல்


விழுப்புரத்தில் பரபரப்பு: பணம் வைத்து சூதாடிய அரசு அதிகாரி உள்பட 9 பேர் கைது : ரூ.2 லட்சம் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2018 3:15 AM IST (Updated: 19 Oct 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் பணம் வைத்து சூதாடிய புதுச்சேரி அரசு அதிகாரி உள்பட 9 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.

விழுப்புரம், 


விழுப்புரம் அருகே பானாம்பட்டு கிராமத்தில் சிலர் பணம் வைத்து சூதாடுவதாக நேற்று முன்தினம் இரவு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் மேற்பார்வையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆனந்தன், ராஜாராமன், பலராமன், நந்தகோபால் ஆகியோர் கொண்ட தனிப்படையினர் பானாம்பட்டு கிராமத்திற்கு விரைந்து சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்குள்ள ஒரு சவுக்கு தோப்பில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த கும்பலை போலீசார் சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். அவர்களில் சிலர் தப்பி ஓடிவிட்டனர். 9 பேர் மட்டும் போலீசாரிடம் பிடிபட்டனர்.

இதையடுத்து பிடிபட்ட அவர்கள் 9 பேரையும் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று அவர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.விசாரணையில் அவர்கள், பானாம்பட்டை சேர்ந்த கோதண்டராமன் (வயது 52), பழனி (51), புதுச்சேரி சக்தி நகரை சேர்ந்த பார்த்திபன் (43), புதுச்சேரி கவுண்டம்பாளையத்தை

சேர்ந்த பொதுப்பணித்துறை அதிகாரி ராதாகிருஷ்ணன் (40), விழுப்புரம் நரசிங்கபுரத்தை சேர்ந்த பத்மநாபன் (34), வினோத்குமார் (25), விழுப்புரம் நடராஜர் தெருவை சேர்ந்த 18 வயதுடைய சிறுவன், புதுச்சேரி முத்திரையர்பாளையம் வண்ணாங்குளத்தை சேர்ந்த பாபு (48), விழுப்புரம் வி.மருதூரை சேர்ந்த அ.தி.மு.க. முன்னாள் கவுன்சிலர் மார்கண்டேயன் (51) என்பது தெரியவந்தது.

இதனை தொடர்ந்து கோதண்டராமன் உள்பட 9 பேர் மீதும் சட்டவிரோதமாக சூதாடியது, போலீசாரை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து 9 பேரையும் கைது செய்தனர்.

மேலும் கைதானவர்களிடம் இருந்து ரூ.2 லட்சம் ரொக்கம் மற்றும் 18 மோட்டார் சைக்கிள்கள், 9 செல்போன்கள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.

பின்னர் கைதான 9 பேரும் விழுப்புரம் மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இதுதவிர இந்த சம்பவத்தில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Next Story