கடலூரில் கழுத்தை இறுக்கி பெண் கொலை: ‘நகைக்காக நண்பரின் மனைவியை கொன்றேன்’- கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்


கடலூரில் கழுத்தை இறுக்கி பெண் கொலை: ‘நகைக்காக நண்பரின் மனைவியை கொன்றேன்’- கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம்
x
தினத்தந்தி 20 Oct 2018 3:00 AM IST (Updated: 19 Oct 2018 11:10 PM IST)
t-max-icont-min-icon

நகைக்காக நண்பரின் மனைவியை கொன்றேன் என்று கடலூரில் கழுத்தை இறுக்கி பெண்ணை கொலை செய்த வழக்கில் கைதான கொத்தனார் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்தார்.

கடலூர், 


கடலூர் அருகே உள்ள கண்டக்காடு கிராமத்தை சேர்ந்தவர் கோபால். கொத்தனார். இவருடைய மனைவி சங்கீதா(வயது 38). சம்பவத்தன்று மதியம் வீட்டில் தனியாக இருந்த இவர் சமையலறையில் மயங்கிய நிலையில் கிடந்தார். கழுத்து மற்றும் நாடியில் காயம் இருந்தது. அவர் அணிந்திருந்த தங்க சங்கிலியை காணவில்லை.

இது பற்றிய தகவல் அறிந்து வந்த தேவனாம்பட்டினம் போலீசார் மயக்க நிலையில் கிடந்த சங்கீதாவை மீட்டு சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இது குறித்து தேவனாம்பட்டினம் போலீசார் வழக்கு பதிவுசெய்தனர். மேலும் சங்கீதாவை கொலை செய்த மர்ம நபரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரவணன் உத்தரவின் பேரில் துணை போலீஸ் சூப்பிரண்டு லாமேக் தலைமையில் போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சரவணன், உதயகுமார், ஏழுமலை, ஏட்டுகள் மோகன், ஜெயமுருகன், கருணாகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கதிரவன், ரவிச்சந்திரன், மற்றும் டெல்டா பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் நடராஜன் ஆகியோரை கொண்ட 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் மர்ம மனிதனை பிடிக்க வலைவீசி தேடி வந்தனர்.

இந்த நிலையில் சங்கீதாவை கொலை செய்தது அவரது கணவர் கோபாலின் நண்பரான கடலூர் புதுப்பாளையம் புதுத்தெருவை சேர்ந்த கொத்தனார் மணி(வயது 43) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். சங்கீதாவை கொலை செய்தது ஏன்? என்பது குறித்து மணி போலீசாருக்கு அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-

சீட்டு பணம்

எனக்கு திருமணமாகி மனைவி மற்றும் பிள்ளைகள் உள்ளனர். நானும், கோபாலும் நண்பர்கள். உள்ளூர் மற்றும் வெளியூருக்கு ஒன்றாக வேலைக்கு சென்று வருவோம். இதனால் நண்பர் என்ற முறையில் நான் கோபால் வீட்டுக்கு அவ்வப்போது சென்று வருவேன்.

இந்த நிலையில் மணல் தட்டுப்பாடு காரணமாக எனக்கு சரியாக வேலை கிடைக்கவில்லை. இதனால் சீட்டு பணத்தை என்னால் சரியாக கட்ட முடியவில்லை. ஆனால் சீட்டு நடத்தி வந்தவர் என்னிடம் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்தார். இதனால் தனக்கு தெரிந்த நபரிடம் பணம் கடன் வாங்கி வருவதற்காக கூத்தப்பாக்கம் விஜயலட்சுமி நகருக்கு சென்றேன். ஆனால் அங்கு பணம் கிடைக்கவில்லை.

இதனால் வேறு என்ன செய்வதென்று யோசித்தேன். அப்போதுதான் சங்கீதாவின் கழுத்தில் கிடந்த தங்கசங்கிலி எனக்கு நியாபகம் வந் தது. பின்னர் அங்கிருந்து நேராக புதுச்சேரியில் உள்ள கன்னிக்கோவிலுக்கு சென்று அங்குள்ள மதுக்கடையில் மது அருந்தி விட்டு ஷேர் ஆட்டோவில் கண்டக்காடு கிராமத்தில் உள்ள கோபால் வீட்டுக்கு சென்றேன்.

அப்போது சங்கீதா என்ன இந்த நேரத்தில் வந்து இருக்கிறீர்கள் என்று கேட்டார். உடனே நான் கோபால் சில மரச்சட்டங்களை எடுத்து வர சொன்னார் என்று கூறியபடி வீட்டுக்குள் சென்றேன். அப்போது சங்கீதாவின் பின்னால் சென்ற நான் திடீரென அவரது கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பறிக்க முயன்றேன். உடனே அவர் என்னை தடுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நான் அங்கே கொடியில் உலர போட்டு இருந்த துண்டை எடுத்து சங்கீதாவின் கழுத்தை இறுக்கினேன். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

பின்னர் அவரது கழுத்தில் கிடந்த 3½ பவுன் சங்கிலியை திருடிவிட்டு நான் எனது வீட்டுக்கு வந்தேன். பின்னர் வீட்டில் குளித்து சாப்பிட்டு விட்டு திருடிய தங்கசங்கிலியில் இருந்த நாணல், மணியை எடுத்துவிட்டு சங்கிலியை மட்டும் பீச்ரோட்டில் உள்ள அடகு கடையில் ரூ.47 ஆயிரத்துக்கு அடகு வைத்தேன். இந்த பணத்தில் ரூ.11 ஆயிரத்தை சீட்டு கட்டினேன். மேலும் ஒரு நபருக்கு தர வேண்டிய ரூ.1,500 கடனையும் செலுத்தினேன்.

மீதமுள்ள ரூ.34 ஆயிரத்து 500-ஐ ஒரு பையிலும், தங்கசங்கிலியில் உள்ள நாணல், மணி ஆகியவற்றை இன்னொரு பையிலும் வைத்து அவற்றை புதுப்பாளையத்தில் வீடு கட்டி வரும் எனது அண்ணனின் வீட்டு வளாகத்தில் தனித்தனியாக புதைத்து வைத்துவிட்டு ஒன்றும் தெரியாதது போல நடந்து கொண்டேன். ஆனால் எப்படியோ போலீசார் என்னை மோப்பம் பிடித்து கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதையடுத்து, கைதான மணியை கடலூர் 1-வது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர் படுத்தி கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

Next Story