கயத்தாறு அருகே : கார்-மொபட் மோதல்; தொழிலாளி பலி
கயத்தாறு அருகே கார்-மொபட் மோதிய விபத்தில் தொழிலாளி பலியானார்.
கயத்தாறு,
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா உப்பத்தூர் சங்கராபுரம் புதுகிராமத்தைச் சேர்ந்தவர் சந்தியாகு. இவருடைய மகன் ரஜினிகாந்த் (வயது 39). இவர் அப்பகுதியில் உள்ள நூற்பாலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ஜான்சிராணி. இவர்களுக்கு குழந்தை இல்லை.
ஆயுத பூஜை விடுமுறையை முன்னிட்டு, நேற்று முன்தினம் மாலையில் ரஜினிகாந்த் தன்னுடைய மனைவியுடன் நெல்லை மாவட்டம் அழகியபாண்டியபுரம் கட்டாலங்குளத்தில் உள்ள மாமனாரின் வீட்டுக்கு செல்ல திட்டமிட்டார். ரஜினிகாந்த் தன்னுடைய மனைவியை பஸ்சில் மாமனாரின் ஊருக்கு அனுப்பி வைத்தார். பின்னர் ரஜினிகாந்த் மொபட்டில் கட்டாலங்குளத்துக்கு தனியாக புறப்பட்டு சென்றார்.
கயத்தாறு அருகே சவலாப்பேரி நாற்கர சாலை பஸ் நிறுத்தம் அருகில் சென்றபோது, பின்னால் வந்த கார் திடீரென்று மொபட்டின் மீது மோதியது. இதில் சாலையோரம் உள்ள ஓடையில் தூக்கி வீசப்பட்ட ரஜினிகாந்த் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துக்குள்ளான காரும், மொபட்டும் சாலையோரம் பாய்ந்து கிடந்தன. விபத்து நிகழ்ந்ததும், கார் டிரைவர் தப்பி ஓடி விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும், கயத்தாறு போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். விபத்தில் இறந்த ரஜினிகாந்தின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவான கார் டிரைவரை தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story