போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்; கல்வீச்சில் 30 பஸ்கள் சேதம்


போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம்; கல்வீச்சில் 30 பஸ்கள் சேதம்
x
தினத்தந்தி 20 Oct 2018 4:00 AM IST (Updated: 20 Oct 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

போலீசார் தடியடி நடத்தியதை கண்டித்து கேரளாவில் முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. போராட்டக்காரர்கள் கல்வீசி தாக்கியதில் 30 அரசு பஸ்கள் சேதம் அடைந்தன. மர்ம ஆசாமிகள் கர்ப்பிணியை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவனந்தபுரம்,

சபரிமலை அய்யப்பன் கோவிலில் அனைத்து வயது பெண் பக்தர்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு கேரளாவில் பெரும் போராட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. சபரிமலையில் காலம் காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் ஆச்சாரங்களை மீறக்கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள், இந்து அமைப்புகள் மற்றும் பா.ஜனதா, காங்கிரஸ் போன்ற அரசியல் கட்சிகளும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றன.

இந்த பரபரப்பான சூழ்நிலையில் கடந்த 17–ந் தேதி சபரிமலை கோவில் நடைதிறக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு 50 வயதிற்குட்பட்ட பெண் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சென்றால் அவர்களை தடுத்து நிறுத்துவோம் என்று போராட்டக்காரர்கள் அறிவித்து இருந்தனர்.

அதன்படி நிலக்கல், பம்பை, பத்தினம்திட்டா போன்ற பகுதிகளில் திரண்ட போராட்டக்காரர்கள் பல பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தியதால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது. இதனால் போராட்டக்காரர்களை போலீசார் தடியடி நடத்தி விரட்டியடித்தனர். இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் போலீஸ் வாகனங்கள், அரசு பஸ்கள் மீது கல்வீசினார்கள். நிலக்கல் பகுதியில் நடந்த வன்முறையில் 30–க்கும் மேற்பட்ட கேரள அரசு பஸ்கள் உடைக்கப்பட்டன. மேலும் 10–க்கும் மேற்பட்ட பக்தர்களின் வாகனங்களும் கல்வீச்சில் உடைந்தன. இது தொடர்பாக 300 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில் சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க எதிர்ப்பு தெரிவித்து சர்வதேச இந்து பரி‌ஷத் சார்பில் கடந்த 18–ந் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. இதனால் அங்கு கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்களும் ஓடவில்லை. சபரிமலைக்கு வந்த பெண் பக்தர்களை தடுத்து நிறுத்தி போராட்டக்காரர்கள் திருப்பி அனுப்பினார்கள்.

மலப்புரம் மாவட்டம் தானூரில் கலவரம் வெடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம ஆசாமிகள் சிலர் போலீசார் மீது சரமாரியாக கல்வீசி தாக்கினார்கள். இதில் 13 போலீசார் காயம் அடைந்தனர். பின்னர் அவர்கள் தானூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதேபோல் தானுரை சேர்ந்த பைஜூ (36) என்பவர் தனது கர்ப்பிணி மனைவி ராசத்தை (32) உறவினர் வீட்டிற்கு மோட்டார் சைக்கிளில் அழைத்து சென்றார். அப்போது மோட்டார் சைக்கிளை தடுத்து நிறுத்திய மர்ம ஆசாமிகள் சிலர் பைஜூவை தாக்கினார்கள். இதனால் அதிர்ச்சி அடைந்த ராசத் தனது கணவரை காப்பாற்ற சென்றார். இதனால் அதிருப்தி அடைந்த அவர்கள் கர்ப்பிணி என்று பாராமல் ராசாத்தையும் தாக்கினார்கள். இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் சம்பவ இடத்திற்கு திரண்டு வந்தனர். இதனால் பீதி அடைந்த மர்ம ஆசாமிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். இதனைதொடர்ந்து படுகாயம் அடைந்த கர்ப்பிணி மற்றும் அவரது கணவரை அப்பகுதி மக்கள் மீட்டு அருகே உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் குறித்து தானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மர்ம ஆசாமிகள் கர்ப்பிணியை தாக்கிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story