அறுவடை தொடங்குவதால் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை


அறுவடை தொடங்குவதால் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும்; விவசாயிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 20 Oct 2018 4:30 AM IST (Updated: 20 Oct 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

அறுவடை தொடங்க உள்ளதால் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி அருகே ஆனைமலை, கோட்டூர், ஆழியாறு பகுதிகளில் நெல் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் கடந்த ஜூலை மாதம் 8–ந்தேதி ஆழியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பிறகு பல்வேறு நெல் ரகங்களை விவசாயிகள் நடவு செய்தனர். தற்போது நடவு செய்யப்பட்ட நெல் இன்னும் ஒரு வாரத்தில் அறுவடைக்கு தயாராகி விடும்.

விவசாயிகளுக்கு நெல்லுக்கு உரிய விலை கிடைக்க கோட்டூர், ஆனைமலையில் நெல் கொள்முதல் மையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இதுகுறித்து விவசாயி பட்டீஸ்வரன் என்பவர் கூறியதாவது:–

பள்ளிவிளங்கால், பெரியணை, அரியாபுரம், காரப்பட்டி, வடக்கலூர் ஆகிய 5 கால்வாய் பாசன பகுதிகளில் 1450 ஹெக்டேர் நெல்சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு பருவமழை தாமதமாக பெய்தது. இதனால் கடந்த ஜூலை மாதம் நெல் சாகுபடி செய்யப்பட்டது. தற்போது நெற்பயிர்கள் வளர்ந்து அறுவடைக்கு தயார் நிலையில் உள்ளன. இன்னும் ஒரு வாரத்தில் அறுவடை தொடங்க உள்ளது.

அரசு நெல் கொள்முதல் மையங்களில் ஒரு குவிண்டாலுக்கு (100 கிலோ) ரூ.1750 வழங்கப்படுகிறது. இந்த விலை விவசாயிகளுக்கு கட்டுபடியானதாகவும், இடைத்தரர்கள் குறுக்கீடு இல்லாமலும் இருக்கும். ஆனால் கொள்முதல் மையத்தை திறக்கவில்லை என்றால் இடைத்தரகர்கள் ஆதிக்கம் அதிகமாக இருக்கும். தனியாரிடம் குறைந்த விலைக்கு நெல்லை விற்பனை செய்ய வேண்டிய நிலைக்கு விவசாயிகள் தள்ளப்படுவார்கள். எனவே கோட்டூர், ஆனைமலை பகுதியில் நெல் கொள்முதல் மையங்கள் திறக்க வேண்டும் என்று கோவை மாவட்ட கலெக்டர் மற்றும் கோவை நுகர்வோர் வாணிப கழக முதுநிலை மேலாளர் ஆகியோரிடம் மனு கொடுக்கப்பட்டு உள்ளது.

இதற்கு முன் நெல் அறுவடை பணியில் தொழிலாளர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். தற்போது தொழிலாளர்கள் பற்றாக்குறை உள்ளது. எனவே எந்திரங்களை நம்பியே அறுவடை செய்ய வேண்டிய உள்ளது. ஒரு ஏக்கர் நெல் அறுவடை செய்ய 2 மணி நேரம் ஆகும். வேளாண் பொறியியல் துறை மூலம் வழங்கப்படும் எந்திரத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு ரூ.1340 கொடுத்தால் போதும்.

அதே தனியார் மூலம் எந்திரம் கொண்டு அறுவடை செய்தால் ஒரு மணி நேரத்துக்கு ரூ.2,500 வாடகை கொடுக்க வேண்டிய உள்ளது. இதனால் நெல் அறுவடை செய்தும், விவசாயிகளுக்கு போதிய லாபம் கிடைப்பதில்லை. பொள்ளாச்சி தாலுகாவில் இருந்த நெல் அறுவடை எந்திரத்தை, தஞ்சாவூருக்கு அனுப்பி விட்டனர். தற்போது அறுவடை தொடங்க உள்ளதால், அந்த எந்திரத்தை கோட்டூர், ஆனைமலை பகுதிக்கு கொண்டு வர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்கள்.


Next Story