தாமிரபரணி மகா புஷ்கர விழா: பாபநாசத்தில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
மகா புஷ்கர விழாவையொட்டி பாபநாசம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தாமிரபரணி ஆற்றில் புனித நீராட நேற்று பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை,
தாமிரபரணி மகாபுஷ்கர விழா கடந்த 11-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. தினமும் ஒவ்வொரு ராசிக்கு உரியவர்கள் தாமிரபரணி ஆற்றில் புனித நீராடி வருகின்றனர். நேற்று விஜயதசமி விடுமுறை நாள் என்பதால் நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் ஏராளமானோர் புனித நீராடினர்.
இதனால் சந்திப்பு கைலாசபுரம், சிந்துபூந்துறை, வண்ணார்பேட்டை, குறுக்குத்துறை பகுதியில் நேற்று மக்கள் கூட்டம் அலைமோதியது.
நெல்லை சந்திப்புக்கு ரெயில் மற்றும் பஸ்களில் வெளியூர் பக்தர்கள் வந்து குவிந்தனர். குறிப்பாக ஆந்திரா மாநிலத்தை சேர்ந்த ஏராளமானோர் வந்து கைலாசபுரம் தைப்பூச மண்டப படித்துறை, குறுக்குத்துறை சுப்பிரமணிய சுவாமி கோவில் படித்துறை, வண்ணார்பேட்டை பேராட்சி அம்மன் கோவில் படித்துறை, சிந்துபூந்துறை சிப்தபுஷ்ப தீர்த்தகட்டம், அருகன்குளம் எட்டெழுத்து பெருமாள் கோவில் ஜடாயுதுறை ஆகிய பகுதிகளில் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அவர்கள் அங்குள்ள தாமிரபரணி ஆற்றில் புனித நீராடினர். பின்னர் கற்பூரம் ஏற்றியும், விளக்கு ஏற்றியும் ஆற்றுக்கு சிறப்பு பூஜை செய்தனர்.
இதையொட்டி நெல்லை டவுனில் உள்ள நெல்லையப்பர்-காந்திமதி அம்பாள் கோவிலில் நேற்று பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இதுதவிர குலசேகரன்பட்டினம் கோவிலுக்கு தசராவையொட்டி நெல்லையில் இருந்து நேற்று ஏராளமான பக்தர்கள் புறப்பட்டனர். முன்னதாக அவர்கள் ஆற்றில் கூட்டம், கூட்டமாக நீராடிவிட்டு லாரி, ஆட்டோ, வேன் உள்ளிட்ட வாகனங்களில் தசரா விழாவுக்கு சென்றனர்.
இதனால் நெல்லை சந்திப்பு பகுதியில் உள்ள ரோடுகளில் திரும்பிய பக்கம் எல்லாம் பக்தர்கள் கூட்டமாக காட்சி அளித்தது. இதே போல் நெல்லை சந்திப்பு, டவுன் பகுதியில் உள்ள இனிப்பு கடைகளில் நெல்லைக்கு வந்திருந்த வெளியூர் மக்கள் நீண்ட வரிசையில் நின்று திருநெல்வேலி அல்வா வாங்கிச்சென்றனர். இதன் காரணமாக நெல்லையில் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது.
அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் குடும்பத்தினருடன் நேற்று முன்தினம் நெல்லை மணிமூர்த்தீசுவரம் உச்சிஷ்ட கணபதி கோவிலுக்கு வந்தார். அங்குள்ள படித்துறையில் மாலையில் நடைபெற்ற தீப ஆரத்தி விழாவில் கலந்து கொண்டு சிறப்பு வழிபாடு நடத்தினர்.
இதேபோல் பாபநாசத்தில் நேற்று விடுமுறை நாள் என்பதால் வழக்கத்தைவிட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. படித்துறை முழுவதும் பக்தர்கள் தலையாகவே காட்சி அளித்தது. வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லாததால் பக்தர்கள் சாலையோரங்களில் தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு ஆற்றில் புனித நீராடினர். இதனால் பாபநாசம் கோவில், டானா பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் போக்குவரத்தை ஒழுங்கு படுத்தினார்கள்.
மேலும் திருப்புடைமருதூர், சேரன்மாதேவி, அத்தாளநல்லூர், கோடகநல்லூர், மேலதிருவேங்கடநாதபுரம், மேலச்செவல் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பல்வேறு படித்துறைகளில் பக்தர்கள் புனித நீராடினர்.
Related Tags :
Next Story