போலி ஆதார் கார்டு தயாரித்ததாக பீகார் வாலிபர்கள் உள்பட 3 பேர் கைது
போலி ஆதார் கார்டுகள் தயாரித்ததாக பீகார் வாலிபர்கள் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
நல்லூர்,
திருப்பூர் செவ்வந்தாம்பாளையம் பகுதியில் எந்தவித ஆவணங்களும் இல்லாமல் வங்கதேசத்தை சேர்ந்த 8 பேர் தங்கி இருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இவர்களுக்கு போலியான ஆதார் கார்டு, பான் கார்டு உள்ளிட்டவற்றை தயார் செய்து கொடுத்த அவினாசி, ரங்காநகரில் வசித்து வந்த பீகாரை சேர்ந்த ரேம் சீஸ்ச வர்மா (வயது 34) என்பவர் தலைமறைவானார். அவரை திருப்பூரில் இருந்து சென்ற தனிப்படை போலீசார் ஜார்க்கண்டில் வைத்து கைது செய்து திருப்பூருக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினார்கள். அவரிடம் இருந்து மடிக்கணினி, கருவிழி மற்றும் கைரேகை பதிவு செய்யும் கருவிகளையும் போலீசார் கைப்பற்றினார்கள்.
இவரையும், இவருக்கு திருப்பூரில் வீடு பார்த்து கொடுத்து உதவிய அவினாசி ரங்காநகரை சேர்ந்த சைமன் என்ற சவரி முத்து(54) என்பவரையும் போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். ரேம் சீஸ்ச வர்மாவிடம் நடத்திய விசாரணையின் படி இவர் பெங்கருவில் உள்ள ஆதார் நிறுவனத்தில் ஏஜெண்டாக பணி புரிந்த போது கொடுக்கப்பட்ட ஐ.டி.யை பயன்படுத்தி நூற்றுக்கணக்கானவர்களுக்கு போலியாக ஆதார் கார்டு உள்ளிட்ட போலி ஆவணங்கள் தயாரித்து கொடுத்தது தெரியவந்துள்ளது.
ஆதார் ஐ.டி. யில் எத்தனை போலியான ஆதார் கார்டு தயாரித்து கொடுத்துள்ளார் என கண்டுபிடிக்க பெங்களூருவில் இருந்து மத்திய அரசின் மின்னணுவியல் துறை துணை இயக்குனர் அசோக் லெனின் உள்ளிட்ட அதிகாரிகள் திருப்பூர் ஊரக போலீஸ் நிலையத்தில் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர். இவர் கொடுத்த தகவலின் அடிப்படையில் திருப்பூர், அங்கேரிபாளையத்தை அடுத்த வெங்கமேடு பகுதியில் மளிகை கடை நடத்தி வந்த பீகார் மாநிலத்தை சேர்ந்த ரவிசங்கர் வயது (30) என்பவரையும் போலீசார் நேற்று கைது செய்தனர்.
இவரும் திருப்பூரில் பலருக்கு போலியான ஆதார் கார்டுகளை தயாரித்து கொடுத்து வந்ததும் தெரியவந்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த இந்த 2 பேரும் கடந்த 2017–ம் ஆண்டு இதே போன்று நூற்றுக்கணக்கான போலியான ஆதார் கார்டு தயாரித்து கொடுத்த வழக்கில் தொடர்புடையவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர். இதுவரை 3 பேரை கைது செய்த போலீசார், இவர்கள் எந்தெந்த குறியீடுகளில் இருந்து ஆதார் கார்டுகளை பதிவு செய்துள்ளனர் என்ற தகவல் திரட்டப்படுவதாகவும், முழுமையான தகவல்கள் கிடைத்தால் மட்டுமே இவர்கள் எத்தனை பேருக்கு போலியான ஆவணங்களை பெற்று கொடுத்துள்ளனர் என்பது குறித்த முழு தகவல் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர்.