ஈரோடு மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானியம்; கலெக்டர் கதிரவன் தகவல்
ஈரோடு மாவட்டத்தில் சொட்டுநீர் பாசனம் அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படும் என்று கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.
ஈரோடு,
ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:–
மத்திய அரசின் விவசாய நீர்ப்பாசனத்திட்டம்–நுண்ணீர் பாசனம் என்ற புதிய திட்டத்தின்கீழ் நீர் மேலாண்மை நடவடிக்கைகள் செயல்படுத்தப்பட உள்ளது. இதில் ஈரோடு மாவட்ட நீர்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை சார்பில் மத்திய அரசு 60 சதவீதமும், மாநில அரசு 40 சதவீதமும் நிதி பங்களிப்பு மூலம் நிறைவேற்றப்படும்.
சொட்டு நீர்ப்பாசனம், தெளிப்பு நீர்ப்பாசனம், மழை தூவுவான் அமைக்க அனைத்து வட்டார விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் மின் மோட்டார், டீசல் பம்புசெட் நிறுவ அதிகபட்சமாக ரூ.15 ஆயிரமும், நீர் எடுத்து செல்லும் குழாய்கள் அமைக்க அதிகபட்சமாக ரூ.10 ஆயிரமும், நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்க அதிகபட்சமாக ரூ.40 ஆயிரமும் வழங்க வழிவகை செய்யப்பட்டு உள்ளது.
நிலத்தடி நீரை குறைந்த அளவு பயன்படுத்த குறைந்த ஆழம் உள்ள கிணறுகள், ஆழ்துளை கிணறுகளை அமைக்க 50 சதவீத மானியம் வழங்கப்படுகிறது. ஈரோடு மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான முதல் தவணையாக 300 கிணறுகள்–ஆழ்துளை கிணறுகள் அமைக்க ரூ.75 லட்சமும், 900 மின் மோட்டர்–டீசல் பம்புசெட் அமைக்க ரூ.1 கோடியே 35 லட்சமும், 600 தண்ணீர் கொண்டு செல்லும் குழாய்கள் அமைக்க ரூ.60 லட்சமும், 600 நீர் சேமிப்பு தொட்டிகள் கட்ட ரூ.2 கோடியே 40 லட்சமும் என மொத்தம் ரூ.5 கோடியே 10 லட்சம் நிதி இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பதிவு முன்னுரிமை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் விவசாயிகளுக்கு பின்னேற்பு மானியம் வழங்கப்படும்.
இந்த திட்டத்தில் பயன்பெற விரும்பும் விவசாயிகள் ஈரோடு திண்டல்மேடு வித்யாநகரில் உள்ள வேளாண்மை துணை இயக்குனர் அலுவலகத்திலும், அனைத்து வட்டார வேளாண்மை மற்றும் தோட்டக்கலை உதவி இயக்குனர் அலுவலகங்களிலும் விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் ஈரோடு மாவட்ட கலெக்டர் கதிரவன் தெரிவித்து உள்ளார்.