நர்சிங் மாணவியை கடத்தி திருமணம் போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
நர்சிங் மாணவியை கடத்தி திருமணம் செய்த வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
ஈரோடு,
சென்னிமலை நல்லப்பாளி பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மகன் கார்த்திக் (வயது 22). இவர் திருப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.
சம்பவத்தன்று கார்த்திக் அதே பகுதியை சேர்ந்த நர்சிங் கல்லூரி மாணவியை கடத்தி சென்றதாக மாணவியின் தாய் சென்னிமலை போலீசில் புகார் செய்தார். முதலாம் ஆண்டு படித்து வரும் அந்த மாணவிக்கு 17 வயதே ஆவதால் இந்த வழக்கு ஈரோடு அனைத்து மகளிர் போலீசுக்கு மாற்றப்பட்டது. மகளிர் போலீசார் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து, 2 பேரையும் வலைவீசி தேடி வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் கார்த்திக்கும், நர்சிங் மாணவியும் சென்னிமலை பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டு இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் போலீசார் விரைந்து சென்று 2 பேரையும் பிடித்து, ஈரோடு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.
இதைத்தொடர்ந்து போலீசார் கார்த்திக்கிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், கார்த்திக் நர்சிங் கல்லூரி மாணவியிடம், திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி, கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூருக்கு கடத்திச்சென்று அங்குள்ள ஒரு விநாயகர் கோவிலில் வைத்து திருமணம் செய்தது தெரியவந்தது. மேலும் அந்த மாணவியை பாலியல் பலாத்காரம் செய்ததாகவும் கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து கார்த்திக்கை போலீசார் போக்சோ சட்டத்தில் கைது செய்து கோபி சிறையில் அடைத்தனர். நர்சிங் மாணவி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டார்.