வேலூர் மத்தியசிறையில் இருந்து ஜாமீனில் வந்த ரவுடி மீது வெடிகுண்டு வீசிய 3 பேர் கைது: பரபரப்பு வாக்குமூலம்
வேலூர் மத்திய சிறையில் இருந்து ஜாமீனில் வெளியே வந்த ரவுடி மீது வெடிகுண்டு வீசிய வழக்கில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பழிக்குப்பழியாக அவரை கொலை செய்ய முயன்றதாக அவர்கள் போலீசில் தெரிவித்துள்ளனர்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரி மடத்தெருவை சேர்ந்தவர் தினேஷ் என்கிற வீச்சு தினேஷ் (வயது 35). ரவுடியான இவர் மீது கொலை, திருட்டு, வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தோட்டப்பாளையத்தை சேர்ந்த ஆட்டோ டிரைவர் சந்தோஷ்குமார் என்பவரை வீச்சு தினேஷ் மற்றும் அவரது கூட்டாளிகள் கொலை செய்து பாலாற்றில் புதைத்தனர்.
இந்த வழக்கில் வீச்சு தினேசை வேலூர் வடக்கு போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர். ஜாமீனில் வெளியே வந்த அவர் மீண்டும் குற்றச்செயல்களில் ஈடுபட்டதால் வீச்சுதினேஷ் மற்றும் அவருடைய கூட்டாளிகள் மணிகண்டன், நவீன் ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்து மீண்டும் சிறையில் அடைத்தனர்.
இந்த நிலையில் வீச்சு தினேஷ் கடந்த 10-ந் தேதி காலையில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அவரை, அவரது கூட்டாளிகள் சந்துரு, வரதன் ஆகியோர் காரில் அழைத்து சென்றனர். அப்போது திடீரென மோட்டார் சைக்கிள்களில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் காரை சுற்றி வளைத்து 2 நாட்டு வெடிகுண்டுகளை கார் மீது வீசினர். இதில், ஒரு வெடிகுண்டு பயங்கர சத்தத்துடன் வெடித்து காரின் முன்பகுதி சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. வெடிகுண்டு வீசிய மர்மநபர்கள் தப்பி ஓடிவிட்டனர்.
இதுகுறித்து பாகாயம் போலீசில் வீச்சுதினேஷ் புகார் செய்தார். அதில் ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகள் வெடிகுண்டு வீசியிருக்கலாம் என்று கூறியிருந்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் வெடிகுண்டு வீசிய வழக்கில் ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளிகளான வேலூர் அரசமரத்தெருவை சேர்ந்த பூபாலன் (34), கருகம்புத்தூரை சேர்ந்த குட்டி (36), வசந்தபுரத்தை சேர்ந்த மைக்கேல் (31) ஆகிய 3 பேரை நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர்.
கடந்த சிலநாட்களுக்கு முன்பு ரவுடி வசூர் ராஜாவின் கூட்டாளியான வேலூர் சைதாப்பேட்டையை சேர்ந்த ஆட்டோ டிரைவர் பிச்சைபெருமாள் என்பவர் வேலூர் பாலாற்றில் கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரை வீச்சுதினேஷ் கூட்டாளிகள் கொலை செய்ததாகவும், அதற்கு பழி வாங்குவதற்காக வீச்சு தினேஷ் மீது வெடிகுண்டு வீசியதாகவும் அவர்கள் வாக்குமூலம் கொடுத்ததாக போலீசார் தெரிவித்தனர்.
தொடர்ந்து இந்த வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.
Related Tags :
Next Story