புதுக்கடை அருகே: பாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரி பெண் சாவு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
புதுக்கடை அருகே பாலியல் தொல்லையால் தீக்குளித்த பட்டதாரி பெண் பரிதாபமாக இறந்தார். அவரது உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.
புதுக்கடை,
குமரி மாவட்டம் புதுக்கடை பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனர். ராஜேஷின் உறவுக்கார பெண் ஒருவர் எம்.ஏ. படித்துள்ளார். 22 வயதான அந்த பெண் வீட்டில் தனியாக டி.வி. பார்த்துக் கொண்டிருந்த போது, ராஜேஷ் அந்த பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. பட்டதாரி பெண்ணுக்கு ராஜேஷ் அண்ணன் உறவுமுறை ஆவார்.
பாலியல் தொல்லையால் மனம் உடைந்த அந்த பெண் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் அங்கு விரைந்து வந்தனர். ராஜேஷ் தப்பி ஓடி விட்டார்.
அக்கம் பக்கத்தினர் அந்த பெண்ணை மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. சிகிச்சை பலனின்றி நேற்று அந்த பெண் பரிதாபமாக இறந்தார். இதையறிந்த உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவர்கள் ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரி முன்பு திரண்டனர். அவர்கள் வாலிபர் ராஜேஷை கைது செய்யவேண்டும் எனக்கூறி அந்த பெண்ணின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, ராஜேஷை கைது செய்யும் வரை போராட்டத்தை கைவிடப்போவதில்லை என உறவினர்கள் உறுதியாக இருந்தனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story