அம்மாப்பேட்டை அருகே: தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி - போலீசார் வலைவீச்சு


அம்மாப்பேட்டை அருகே: தம்பியை கத்தியால் குத்திக்கொன்ற விவசாயி - போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 20 Oct 2018 3:00 AM IST (Updated: 20 Oct 2018 2:01 AM IST)
t-max-icont-min-icon

அம்மாப்பேட்டை அருகே தம்பியை கத்தியால் குத்தி கொன்ற விவசாயியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

அம்மாப்பேட்டை,

தஞ்சை மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே புளியக்குடி ஊராட்சி சிக்கப்பட்டு கிராமம் இலுப்பைத் தோப்பு பகுதியில் வசித்து வந்தவர் இளையராஜா(வயது 35). இவர் மலேசியாவில் வேலை பார்த்துவிட்டு கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து இருந்தார். இவருக்கு சுமதி(25) என்ற மனைவியும், 6 வயதில் சுப்ரியா, 4 வயதில் சுபஸ்ரீ என்ற இரு பெண் குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று காலை இளையராஜா அவரது வீட்டிற்கு அருகே உள்ள இலுப்பைத் தோப்பு பஸ் நிறுத்தம் அருகே கத்திக்குத்்து காயங்களுடன் இறந்து கிடந்தார். இதை பார்த்த அக்கம், பக்கத்தினர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த அம்மாப்பேட்டை போலீசார் இறந்து கிடந்த இளையராஜாவின் உடலை கைப்பற்றி பாபநாசம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள் வெளியானது. அதுபற்றிய விவரம் வருமாறு:-

இளையராஜா வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தபோது தனது நண்பர்கள் மூலம் இலுப்பைத்தோப்பு பகுதியைச் சேர்ந்த அவரது அண்ணன் சின்னப்பனிடம்(37) நகைகள் கொடுத்துள்ளார். மேலும் பணமும் அனுப்பி உள்ளார்.
இந்த நிலையில் ஊருக்கு வந்த இளையராஜா தனது அண்ணனிடம் தான் கொடுத்து அனுப்பிய நகை, பணம் குறித்து கேட்டுள்ளார். இதுகுறித்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில் ஆயுத பூஜை விழாவிற்காக இளையராஜாவின் மனைவி மற்றும் மகள்கள் கோவிந்தகுடியில் உள்ள இளையராஜாவின் மாமியார் வீட்டிற்கு சென்றிருந்தனர். நேற்று இரவு இளையராஜாவிற்கும், அவரது அண்ணன் சின்னப்பனுக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சின்னப்பன், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் இளையராஜாவை குத்தி விட்டு அங்கிருந்து ஓடி விட்டார். இதில் அவரது இடதுபுற வயிறு மற்றும் விலா பகுதியில் பலத்த கத்திக்குத்து விழுந்தது. கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த இளையராஜா சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

இது குறித்து புளியக்குடி கிராம நிர்வாக அதிகாரி (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் கொடுத்த புகாரின் பேரில் அம்மாப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செங்குட்டுவன், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகிருஷ்ணன், ஸ்ரீதர் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தம்பியை கத்தியால் குத்திவிட்டு தப்பியோடிய விவசாயி சின்னப்பனை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story