முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டி
முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
மதுரை ஒத்தக்கடையில் அ.தி.மு.க. ஆண்டு விழா பொதுக்கூட்டம் நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு பேசினார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
தமிழகத்தில் அ.தி.மு.க. அரசின் சாதனைகளை மக்களிடம் எடுத்துரைக்கும் வகையில் ஜெயலலிதா பேரவை சார்பில் சைக்கிள் பேரணி நடைபெற்று வருகிறது. இந்த பேரணி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த நிலையில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் 18 மாத ஆட்சியின் சாதனைகளை மக்களுக்கு விளக்கி திருப்பரங்குன்றத்தில் வருகிற 24–ந் தேதி பெண்கள் மட்டும் பங்கேற்கும் சைக்கிள் பேரணி நடக்கிறது. இதில் கழக துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம் மற்றும் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, வேலுமணி, செங்கோட்டையன், அன்பழகன் உள்பட பலர் பங்கேற்கிறார்கள். பேரணியில் 3 ஆயிரம் பெண்கள் கலந்து கொண்டு அரசின் சாதனைகளை மக்களிடம் விளக்குகிறார்கள்.
இன்றைக்கு ஜெயலலிதா அரசின் மீது பல்வேறு அவதூறுகளை சுமத்தி கொண்டிருப்பவர்கள் எந்த தகுதி அடிப்படையில் குற்ற்ச்சாட்டுகளை கூறுகிறார்கள் என்று சிந்திக்க வேண்டும். அ.தி.மு.க.வில் உள்ள தொண்டர்கள் அனைவரும் கொடி, சின்னம் எங்கே இருக்கிறதோ அங்கே உறுதியாக இருக்கிறார்கள். ஆனால் தினகரன் போன்ற சிலர் அ.தி.மு.க.வில் குழப்பத்தை ஏற்படுத்தி திட்டமிட்டு பொய் மூட்டைகளை கட்டவிழ்த்து விரும்புகிறார்கள். தினகரனின் மோசடி வித்தை பலிக்காது.
தொண்டர்கள் செல்வாக்கு இல்லாத தினகரன் அ.தி.மு.க.வில் சிறு சேதாரத்தை கூட ஏற்படுத்த முடியாது. ஜெயலலிதா வழியில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நல்லாட்சி நடத்தி வருகிறார்கள். முதல்–அமைச்சலை நீக்கி விட்டால் அ.ம.மு.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு கொடுப்பதாக கூறுகிறார்கள். ஆனால் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நீக்கும் பேச்சுக்கே இடமில்லை.
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் எப்போது நடந்தாலும் அதில் அ.தி.மு.க. வெற்றி பெறும். திருப்பரங்குன்றத்தில் ஓட்டுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்து வருவதாக தினகரன் அணியை சேர்ந்த தங்கதமிழ்ச்செல்வன் கூறியுள்ளார். இது ஒரு கற்பனை கதை. நாங்கள் பணம் கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய நிலை ஏற்படவில்லை.
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா விசுவாசிகள் நிறைந்த திருப்பரங்குன்றத்தில் யாரும் குழப்பம் விளைவிக்க முடியாது. வாக்காளர்களுக்கு நாங்கள் 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தாக நிரூபித்தால் பொது வாழ்க்கையை விட்டு விலக நான் தாயராக இருக்கிறேன். அ.ம.மு.க. ஒரு கட்சியே இல்லை. அது தினகரன் பதவி பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட இயக்கம். இதனை தேர்தல் கமிஷன்அங்கீகரிக்கவில்லை. அ.தி.மு.க.வை யாரும் அசைக்க முடியாது.
இவ்வாறு அவர் கூறினார்.