குடிபோதையில் மனைவியை தாக்கிய முதியவர் அடித்துக் கொலை: மகன் கைது
ஆண்டிப்பட்டி அருகே குடிபோதையில் மனைவியை தாக்கிய முதியவரை அடித்துக் கொலை செய்த மகன் கைது செய்யப்பட்டார்.
ஆண்டிப்பட்டி,
ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை புதூர் கிராமத்தை சேர்ந்தவர் வெள்ளையன் என்ற சின்ன சடையாண்டி (வயது 62). இவர் கால்நடை மருத்துவமனை உதவியாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது மனைவி மாயக்காள் (55). மகன் பிரவீந்திரன் (30). வெள்ளையன் மது குடித்து விட்டு வீட்டில் மனைவியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில் நேற்று காலை மது குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த வெள்ளையன், குடும்ப பிரச்சினை காரணமாக தகராறு செய்து மனைவியை தாக்கினார். மாயக்காளின் அலறல் சத்தம் கேட்டு அருகில் வசிக்கும் பிரவீந்திரன் வீட்டிற்கு வந்தார்.
அங்கே, குடிபோதையில் தாயை தந்தை அடிப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவர் வெள்ளையனை தடுக்க முயன்றார். அது முடியாமல் போகவே, ஆத்திரத்தில் அருகில் இருந்த கம்பை எடுத்து வெள்ளையனின் தலையில் அடித்தார். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த வெள்ளையனை அக்கம்பக்கத்தினர் மீட்டு தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே வெள்ளையன் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து வைகை அணை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரவீந்திரனை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story