செங்குன்றத்தில் துணிக்கடையில் பயங்கர தீ விபத்து ரூ.3 கோடி பொருட்கள் எரிந்து நாசம்
செங்குன்றத்தில் துணிக்கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் ரூ.3 கோடி பொருட்கள் எரிந்து நாசமானது.
செங்குன்றம்,
செங்குன்றம் ஜி.எஸ்.டி. சாலையில் டேவிட்ராஜ் (வயது 47) என்பவருக்கு சொந்தமான 3 மாடிகளை கொண்ட துணிக்கடை உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு கடையில் இருந்து திடீரென புகை வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் கடை உரிமையாளருக்கு தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அவர் அங்கு விரைந்து வந்தார். அப்போது கடையில் உள்ள துணிகள் தீப்பிடித்து எரிவது கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுபற்றி தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் செங்குன்றம், மாதவரம், மணலி, அம்பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்ற வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பிறகு தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். அருகில் உள்ள மற்ற கடைகளுக்கு தீ பரவாமல் தடுக்கப்பட்டது. நேற்று காலை 7 மணியளவில் தீ முழுவதுமாக அணைக்கப்பட்டது. இந்த விபத்தில் முதல் 2 மாடியில் இருந்த துணிமணிகள் முழுமையாக தீயில் கருகி நாசமடைந்தது.
சுமார் ரூ.3 கோடி மதிப்புள்ள துணிகள் எரிந்து நாசமடைந்ததாக தெரிகிறது. நள்ளிரவு நேரம் என்பதால் கடை அடைக்கப்பட்டு இருந்ததால் பணியாளர்கள் யாரும் இல்லாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டது. இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் அம்பத்தூர் போலீஸ் உயரதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினார்கள்.
மின்கசிவு காரணமாக கடையில் தீப்பிடித்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.