தவளக்குப்பம் அருகே கத்தியை காட்டி கல்லூரி மாணவன் கடத்தல்; போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகை


தவளக்குப்பம் அருகே கத்தியை காட்டி கல்லூரி மாணவன் கடத்தல்; போலீஸ் நிலையத்தை மக்கள் முற்றுகை
x
தினத்தந்தி 20 Oct 2018 4:35 AM IST (Updated: 20 Oct 2018 4:35 AM IST)
t-max-icont-min-icon

தவளக்குப்பம் அருகே தானாம்பாளையம் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்த பொறியியல் கல்லூரி மாணவனை கத்தி முனையில் ஒரு கும்பல் கடத்தி சென்றது. அதை அறிந்த கிராம மக்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

பாகூர்,

புதுவை மாநிலம் தவளக்குப்பத்தை அடுத்த ஆண்டியார்பாளையம்பேட் முத்துமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார். இவருடைய மகன் சசி அரிகரன் (வயது 20). வில்லியனூரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார். இவர் நேற்று கல்லூரிக்கு சென்றுவிட்டு மாலையில் மோட்டார் சைக்கிளில் தானாம்பாளையம் பகுதிக்கு வந்து கொண்டிருந்தார்.

அப்போது நல்லவாடு பகுதியை சேர்ந்த பிரேம்குமார் என்பவர் சசி அரிகரன் மோட்டார் சைக்கிளை வழிமறித்தார். பின்னர் அவர் கத்தியைக் காட்டி அவரை மிரட்டி அவரை அங்கேயே நிறுத்தினார். அப்போது பிரேம்குமாரின் கூட்டாளிகள் 6 பேர் 3 மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்கள் சசி அரிகரன் கழுத்து மற்றும் இடுப்பில் கத்தியை வைத்து மிரட்டி அவரை மோட்டார் சைக்கிளில் ஏற்றி கடத்தி நல்லவாடு மீனவ கிராமத்தின் அருகே உள்ள முந்திரி தோப்புக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருடைய ஆடைகளை கழற்றி உள்ளாடையுடன் அவரை உட்கார வைத்து கம்பு மற்றும் கையால் தாக்கினர்.

சசி அரிகரனை கடத்தி சென்றதை பார்த்தவர்கள் ஆண்டியார்பாளையம்பேட்டில் உள்ள அவருடைய உறவினருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் நல்லவாடு கிராம மக்கள் முந்திரி தோப்புக்கு விரைந்து வந்தனர். மக்கள் கூட்டமாக வருவதை பார்த்தவுடன் பிரேம்குமார் மற்றும் அவனது கூட்டாளிகள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். அங்கு காயம் அடைந்த நிலையில் இருந்த சசி அரிகரனை மீட்டு புதுவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில் கடத்தலில் ஈடுபட்டவர்களை கைது செய்யக்கோரி ஆண்டியார்பாளையம்பேட் கிராமத்தை சேர்ந்த 100–க்கும் மேற்பட்டவர்கள் தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

அப்போது கிராம மக்கள் கூறுகையில் ‘‘பிரேம்குமார் கஞ்சா விற்பனை செய்வதும், ஆண்டியார்பாளையம் பேட் கிராமத்திற்கு செல்லும் மக்களை கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிப்பதாகவும், அது தொடர்பாக பலமுறை தவளக்குப்பம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை’’ என்றும் தெரிவித்தனர். இந்த நிலையில் மாணவனை கடத்தியதை அறிந்ததும் கிராம மக்கள் ஆத்திரத்துடன் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர். அதனால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுபற்றி தகவல் அறிந்தவுடன் தெற்குப்பகுதி போலீஸ் சூப்பிரண்டு அப்துல் ரகீம், அரியாங்குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குற்றிவாளியை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்தனர். இதையடுத்து கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதற்கிடையே சம்பவம் பற்றி அறிந்ததும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் ஆல்வா நேற்று நள்ளிரவு தவளக்குப்பம் போலீஸ் நிலையத்திற்கு வந்தார். அங்கு போலீசாரிடம் நடந்த சம்பவங்களை கேட்டறிந்தார். மேலும் உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட்டார்.


Next Story