கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள் இருந்தால் கடும் நடவடிக்கை; திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் எச்சரிக்கை
கொசுக்கள் உற்பத்தியாகும் வகையில் வீடுகள், வணிக வளாகங்கள் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
திருவள்ளூர்,
திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–
திருவள்ளூர் மாவட்டத்தில் டெங்கு கொசு ஒழிப்பு பணி போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக பணியாளர்கள் செல்லும் போது வீடுகள், பள்ளி வளாகங்கள், திரையரங்குகள், வணிக வளாகங்கள் கட்டுமானப்பணிகள் நடைபெறும் இடங்கள், காலி மனைகள், ஆஸ்பத்திரிகள் போன்றவற்றில் மழைநீர் தேங்குமாறு உடைந்த பானைகள், உடைந்த மின்சாதனங்கள், தண்ணீர் தொட்டிகள், டயர்கள் காணப்பட்டால் அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
அனைத்து தரப்பினரும் வருகிற 24–ந்தேதிக்குள் தங்களது வீடுகளுக்கான சுற்றுப்புறங்களையும், அலுவலக வளாகத்தையும் சுத்தப்படுத்தி கொள்ள காலஅவகாசம் அளிக்கப்படுகிறது.
வருகிற 25–ந்தேதி முதல் அரசு அலுவலர்கள் ஆய்வுக்கு வருவார்கள். அவ்வாறு ஆய்வுக்கு வரும்போது வீடுகளோ, வணிக வளாகமோ கொசு உற்பத்தியாகும் வகையில் இருந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும். அதன் உரிமையாளர்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.