இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் தகராறு: பெண் கொலை, 3 வாலிபர்கள் கைது
இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர்,
சென்னை ராயபுரம் செட்டித்தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் பிரேம்குமார்(வயது 40). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பரமேஸ்வரி(38). இவர்களுக்கு 16 வயதில் ஒரு மகள் இருக்கிறார்.
அவரை பக்கத்து வீட்டில் வசிக்கும் கூலித்தொழிலாளி வினோத்குமார்(26) என்பவர் கிண்டல் செய்ததாக தெரிகிறது. இது குறித்து பரமேஸ்வரி, ராயபுரம் போலீசில் புகார் செய்தார்.
அதன்பேரில் ராயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜாராபர்ட், இளம்பெண்ணை கிண்டல் செய்ததாக வாலிபர் வினோத்குமாரை போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று கண்டித்து அனுப்பி வைத்தார். இதனால் அவர் ஆத்திரத்தில் இருந்தார்.
இதற்கிடையில் வேலைக்கு சென்றிருந்த பரமேஸ்வரியின் கணவர் பிரேம்குமார் இரவில் வீடு திரும்பினார். அப்போது தனது மகளை பக்கத்து வீட்டு வாலிபர் கிண்டல் செய்தது பற்றி அறிந்து கோபமடைந்த அவர், வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தார்.
அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், மேலும் ஆத்திரம் அடைந்த வினோத்குமார், பிரேம்குமாரை சரமாரியாக அடித்து உதைத்தார்.
இதுபற்றி பிரேம்குமார் பாரிமுனை ரேவ் பகுதியில் வசிக்கும் தனது உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். இரவோடு இரவாக அனைவரும் பிரேம்குமார் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அனைவரும் அருகில் உள்ள வினோத்குமார் வீட்டுக்கு சென்று அவரை கண்டித்தனர். அப்போது அவர்களுக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டு, கைகலப்பாக மாறியது.
அப்போது வினோத்குமார், வீட்டில் இருந்த கத்தியை எடுத்து வந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட பிரேம்குமாரின் உறவினரான குமார் என்பவருடைய மனைவி மேரி (40) என்பவரை கத்தியால் குத்தினார். இதை தடுக்க முயன்ற மேரியின் தங்கை மெர்லின், பிரேம்குமார் ஆகியோருக்கும் கத்திக்குத்து விழுந்தது.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த மேரியை மீட்டு ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி மேரி பரிதாபமாக இறந்தார்.
இது குறித்த புகாரின்பேரில் ராயபுரம் போலீசார் கொலை வழக்குப்பதிவு செய்து, சம்பவம் தொடர்பாக வினோத்குமார், அவருடைய தம்பி தமிழ் (23), உறவினர் சங்கர் (28) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
காயம் அடைந்த மெர்லின், பிரேம்குமார் இருவருக்கும் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இளம்பெண்ணை கிண்டல் செய்ததால் ஏற்பட்ட தகராறில், பெண் ஒருவர் கத்தியால் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.