ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்


ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே மேம்பாலம் அமைக்கும் பணி தொடக்கம்
x
தினத்தந்தி 21 Oct 2018 4:30 AM IST (Updated: 20 Oct 2018 9:53 PM IST)
t-max-icont-min-icon

ஊத்துக்கோட்டையில் ஆரணி ஆற்றின் குறுக்கே ரூ.28 கோடியில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி தொடங்கியது.

ஊத்துக்கோட்டை,

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். அப்படி திறந்து விடும் தண்ணீர் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்காள விரிகுடாவில் கலக்கிறது. பிச்சாட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விட்டால் ஊத்துக்கோட்டை ஆரணி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும். இதனால் வாகன போக்குவரத்து அடியோடு ரத்து செய்யப்படும்.

இதை கருத்தில் கொண்டு ஆங்கிலேயர்கள் 1937–ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 480 மீட்டர் தூரத்துக்கு தரைப்பாலம் அமைத்தனர். இந்த தரைப்பாலத்தை கடந்துதான் தற்போது திருவள்ளூர், பூந்தமல்லி, தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு போன்ற பகுதிகளுக்கு வாகன போக்குவரத்து நடைபெற்று வருகிறது.

ஆரணி ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டால் வாகன போக்குவரத்து முற்றிலும் தடைபடுகிறது. இதனை கருத்தில் கொண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே உயர் மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என்று ஊத்துக்கோட்டை பொதுமக்கள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதன் பேரில் உயர் மட்ட மேம்பாலம் அமைக்க அரசு ரூ.28 கோடி ஒதுக்கியது. ஈரோட்டை சேர்ந்த நிறுவனத்துக்கு பாலம் அமைக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளது.

மேம்பாலம் 450 மீட்டர் நீளத்தில் 11 மீட்டர் அகலத்தில் கட்டப்பட உள்ளது. மேம்பாலம் மீது பொதுமக்கள் நடந்து செல்ல ஏதுவாக இரு புறங்களிலும் நடை பாதை அமைய உள்ளது. தரை மட்டத்தில் இருந்து 20 அடி உயரத்தில் அமைய உள்ள பாலத்தை 21 தூண்கள் தாங்கி நிற்கும். மேம்பாலம் அமைக்கம் பணிகளுக்காக தரைப்பாலத்தை ஒட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. மேம்பாலம் அமைப்பதற்கு முதற்கட்ட பணியாக தூண்கள் அமைக்கும் பணி தொடங்கியது.


Next Story