மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 9 மாதங்களில் 1,470 வழக்குகள் பதிவு
மாவட்டத்தில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசாரால் கடந்த 9 மாத கால கட்டத்தில் 1,470 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, சுமார் 1,300 லிட்டர் மதுபானம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
தேனி,
தேனி மாவட்டத்தில் தேனி, உத்தமபாளையம் ஆகிய 2 இடங்களில் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீஸ் நிலையங்கள் செயல்படுகிறது. அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை தடுத்தல், கள்ளச்சாராயம் தயாரிப்பு மற்றும் விற்பனையை தடுத்தல், வெளிமாநில மதுபானம் விற்பனையை கண்டுபிடித்து தடுத்தல் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மதுகடத்துவதை தடுத்தல் போன்ற பணிகளை இந்த போலீசார் செய்து வருகின்றனர். மாவட்டத்தில் அனுமதியின்றி மதுவிற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுத்தாலும், மீண்டும் மீண்டும் அதே தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். ஒருமுறை கைது செய்யப்படுபவர்கள் மீண்டும், மீண்டும் அதே குற்றத்துக்காக கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தேனி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் கடந்த 9 மாதத்தில் 740 வழக்குகளும், உத்தமபாளையம் மதுவிலக்கு அமலாக்கப்பிரிவில் 730 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டு உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 1,470 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. வழக்குப்பதிவு செய்யப்படும் நபர்கள் கைது செய்யப்படுகின்றனர். அவர்கள் பெரும்பாலும் அன்றைய தினமே போலீஸ் நிலைய ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ளனர். சிலர் மட்டுமே சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு இதுவரை அனுமதியின்றி மதுவிற்பனை செய்தது தொடர்பாக சுமார் 7 ஆயிரம் மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அதாவது சுமார் 1,300 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. தொடர்ந்து மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு போலீசார் ரோந்து பணி மேற்கொண்டு வழக்குகள் பதிவு செய்து வந்தாலும், டாஸ்மாக் கடைகளில் மொத்தமாக மதுபானம் விற்பனை செய்வது தொடர்கதையாக உள்ளதால் அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை தடுக்க முடியாத நிலைமை ஏற்பட்டுள்ளது. எனவே, அனுமதியின்றி மதுவிற்பனை செய்வதை தடுக்கவும், திறந்தவெளி பகுதிகள் மதுபான பார் ஆக மாற்றப்படுவதை தடுக்கவும் டாஸ்மாக் கடைகளில் விதியை மீறி மொத்த விற்பனை செய்வதை தடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story