குடியாத்தம் அருகே எறும்புதிண்ணி ஓடுகளை கடத்தி வந்த ஆந்திர வாலிபர் கைது : மோட்டார்சைக்கிள் பறிமுதல்


குடியாத்தம் அருகே எறும்புதிண்ணி ஓடுகளை கடத்தி வந்த ஆந்திர வாலிபர் கைது : மோட்டார்சைக்கிள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2018 10:15 PM GMT (Updated: 20 Oct 2018 5:23 PM GMT)

குடியாத்தம் அருகே வனத்துறையினர் நடத்திய வாகன தணிக்கையில் எறும்புதிண்ணி ஓடுகளை கடத்தி வந்த ஆந்திர வாலிபரை கைது செய்தனர்.

குடியாத்தத்திலிருந்து சிறிது தொலைவில் ஆந்திர மாநிலம் உள்ளது. நேற்று முன்தினம் இரவு குடியாத்தம் வனச்சரக அலுவலர் மகேந்திரன், வனவர் ரவி, வனக்காப்பாளர் வெங்கடேசன் மற்றும் வனத்துறையினர் சயனகுண்டா சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ஆந்திர மாநிலத்திலிருந்து மோட்டார்சைக்கிளில் வாலிபர் ஒருவர் வந்தார்.

அவரை நிறுத்தி வனத்துறையினர் விசாரணை நடத்தியபோது முன்னுக்கு பின் முரணாக கூறினார். சந்தேகம் அடைந்த வனத்துறையினர் அவர் வைத்திருந்த பையை சோதனையிட்டபோது அதில் எறும்புதிண்ணி ஓடுகள் இருந்தன. விசாரணையில் அவர் ஆந்திர மாநிலம் பலமனேர் பழைய பேட்டை பெரிய மசூதி தெருவை சேர்ந்த முகமது இலியாஸ் (வயது 30) என்பது தெரியவந்தது.

இதனையடுத்து மோட்டார்சைக்கிளை பறிமுதல் செய்து அவரை அலுவலகத்துக்கு கொண்டு சென்றனர்.


அங்கு நடத்திய விசாரணையில் எறும்புதிண்ணி ஓடுகளில் மருத்துவ குணம் உள்ளது. இதனை ஆந்திர மாநிலத்தை சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் வாங்கி அதனை கூடுதல் விலைக்கு வாணியம்பாடியில் உள்ள வியாபாரியிடம் விற்பதற்காக கொண்டு சென்றது தெரியவந்தது. வன உயிரினங்களை கொல்வது குற்றம் ஆகும். எனவே வனவிலங்குகள் பாதுகாப்பு சட்டத்தின்கீழ் முகமது இலியாசை வனத்துறையினர் கைது செய்து எறும்பு திண்ணி ஓடுகளை அவர் யாரிடம் வாங்கினார் என்பது குறித்தும் வாணியம்பாடியில் இவற்றை வாங்க இருந்த வியாபாரி யார்? என்பது குறித்தும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story