சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகள் அமல்படுத்தாதபோது சபரிமலை விவகாரத்தில் மட்டும் அரசு வேகம் காட்டுவது ஏன்?


சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகள் அமல்படுத்தாதபோது சபரிமலை விவகாரத்தில் மட்டும் அரசு வேகம் காட்டுவது ஏன்?
x
தினத்தந்தி 20 Oct 2018 10:45 PM GMT (Updated: 20 Oct 2018 5:26 PM GMT)

சுப்ரீம் கோர்ட்டின் பல தீர்ப்புகள் அமல்படுத்தாமல் இருக்கும் போது சபரிமலை விவகாரத்தில் மட்டும் அரசு வேகம் காட்டுவது ஏன்? என்று திருவிதாங்கூர் ராணி கேள்வி எழுப்பியுள்ளார்.

களியக்காவிளை,

விருச்சிக ராசிக்கு குருபகவான் பெயர்ச்சி அடைந்ததை தொடர்ந்து மகா புஷ்கர விழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி 144 ஆண்டுகளுக்கு பிறகு மார்த்தாண்டம் அருகே திக்குறிச்சி மகாதேவர் கோவில் தாமிரபரணி ஆற்றின் படித்துறையில் மகா புஷ்கர விழா கடந்த 12–ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது.

9–ம் நாள் விழாவான நேற்று காலை முதல் மகா சுதர்சன ஹோமம், ருத்ரஹோமம் போன்ற ஹோமங்கள், தாமிரபரணி ஆற்றுக்கு ஆரத்தி போன்றவை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திருவிதாங்கூர் மன்னர் குடும்ப ராணி அஸ்வதி திருநாள் கவுரி லட்சுமிபாய் தம்புராட்டி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

பின்னர், அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:–

சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்கலாம் என்ற சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை நடைமுறைப்படுத்த கேரளா அரசு முயற்சிக்கும் விவகாரம் சதாதன தர்மத்திற்கு விடப்பட்ட சவால். இது என்னையும், அய்யப்ப பக்தர்களையும் மிகுந்த வேதனைக்குள்ளாக்கி உள்ளது. பாரம்பரியமாக உள்ள ஆச்சார அனுஷ்டானங்களையும் மத உணர்வுகளையும் புண்படுத்த முயற்சிப்பதால் ஏற்பட்ட மன வேதனையின் வெளிப்பாடு தான் தந்திரி நடையை பூட்டி தேவசம் போர்டு அதிகாரிகளுக்கு ஒப்படைக்கப்படுவதாக கூறியது. பக்தர்களின் போராட்டத்தால் தற்போது நிலைமை சீரடைந்து வருவது மனதிற்கு திருப்தியை தருகிறது.

சுப்ரீம் கோர்ட்டின் பல்வேறு தீர்ப்புகள் நடைமுறை படுத்தப்படாமல் இருக்கும் பட்சத்தில், சபரிமலை விவகாரத்தில் வேகம் காட்டுவது புரியவில்லை. காரணம் என்னவென்று அரசுக்கு தான் தெரியும்.

இவ்வாறு அவர் கூறினார்.

புஷ்கர விழாவின் இறுதி நாளான நாளை (திங்கட்கிழமை) ஹோமங்கள் மற்றும் 600 சிவாச்சாரியர்கள் பங்குபெறும் மகா திருவாசக வேள்வியும் நடைபெறுகிறது.

Next Story