போலீசாருக்கான மினி மாரத்தான் ஓட்டம் போலீஸ் சூப்பிரண்டு தொடங்கி வைத்தார்
வேலூரில் நேற்று போலீசாருக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதனை போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கி வைத்தார்.
பணியின்போது மரணமடைந்த போலீசாருக்கு ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் மாதம் 21-ந் தேதி நினைவஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) போலீசாருக்கான நினைவுதினம் அனுசரிக்கப்படுகிறது.
இதனை முன்னிட்டு நேற்று வேலூரில் போலீசாருக்கான மினி மாரத்தான் ஓட்டம் நடத்தப்பட்டது. வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து நேதாஜி விளையாட்டு அரங்கம் வரை நடத்தப்பட்ட இந்த மினி மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் தொடங்கிவைத்தார்.
இதில் ஏராளமான போலீசார் கலந்து கொண்டு ஓடினர். கலெக்டர் அலுவலகம் அருகில் இருந்து தொடங்கி சர்வீஸ் ரோடு வழியாக கிரீன்சர்க்கிள், காட்பாடிரோடு, பழைய பஸ் நிலையம். தெற்கு போலீஸ் நிலையம், திருமலை- திருப்பதி தேவஸ்தான அலுவலகம் வழியாக சென்ற அவர்கள் நேதாஜி விளையாட்டு அரங்கத்தை அடைந்தனர்.
அங்கு முதல் 3 இடங்களை பிடித்தவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரவேஷ்குமார் பரிசு வழங்கினார். துணைபோலீஸ் சூப்பிரண்டுகள் சுரேஷ் (கலால்), ஸ்ரீதரன், இன்ஸ்பெக்டர்கள் நாகராஜன், அசோக் மற்றும் பலர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story