தஞ்சை பெரியகோவிலில், 3-வது முறையாக பழங்கால ஐம்பொன் சிலைகள் நவீன கருவிகள் மூலம் ஆய்வு


தஞ்சை பெரியகோவிலில், 3-வது முறையாக பழங்கால ஐம்பொன் சிலைகள் நவீன கருவிகள் மூலம் ஆய்வு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:45 AM IST (Updated: 21 Oct 2018 12:39 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டு உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் 3-வது முறையாக நவீன கருவிகள் மூலம் ஆய்வு செய்யப்பட்டன. 6½ மணி நேரம் நடந்த இந்த ஆய்வில் சிலைகள் மாற்றப்பட்டது உறுதியானதா? என்பது குறித்து திடுக்கிடும் தகவல்கள் கிடைத்துள்ளன.

தஞ்சாவூர்,

தஞ்சை பெரியகோவில் உலக பிரசித்தி பெற்ற கோவிலாகும். இது கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் இருந்த ராஜராஜசோழன் சிலை மற்றும் அவருடைய பட்டத்தரசியான லோகமாதேவி சிலைகள் திருட்டு போனது. இந்த சிலைகள் குஜராத் அருங்காட்சியகத்தில் இருந்து மீட்கப்பட்டன.

இந்த சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் மீட்டு வந்தனர். இந்த சிலைகள் தஞ்சை பெரியகோவிலில் வைக்கப்பட்டு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. மேலும் தஞ்சை பெரியகோவிலில் உள்ள சிலைகள் அனைத்தும் அங்குள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளன. இந்த சிலைகளை ஐ.ஜி.பொன்மாணிக்கவேல் தலைமையிலான குழுவினர் ஏற்கனவே ஆய்வு செய்தனர்.

தொல்லியல் துறை அதிகாரிகள் ஆய்வு

இந்த நிலையில் இக்கோவிலில் உள்ள ஐம்பொன்னால் ஆன 41 பழங்கால சிலைகள் மாறப்பட்டு இருப்பதற்கான முகாந்திரம் உள்ளதாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசாருக்கு கிடைத்தது. அதன் பேரில் தொல்லியல் துறை அதிகாரிகள் மற்றும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் கடந்த 11-ந்தேதி 3 மணி நேரத்திற்கு மேலாக ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பாதி பணிகள் முடிவடைந்தன.

இந்த நிலையில் நேற்று 3-வது முறையாக ஆய்வு செய்யப்பட்டது. தொல்லியல் துறை தென்மண்டல இயக்குனர் நம்பிராஜன் தலைமையில் 10 பேர் கொண்ட குழுவினரும், சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜாராமன் தலைமையில் 2 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 10 இன்ஸ்பெக்டர்கள், 10 சப்-இன்ஸ்பெக்டர்கள், 20 போலீசார் என மொத்தம் 55-க்கும் மேற்பட்டவர்கள் இந்த ஆய்வில் ஈடுபட்டனர்.

2 நவீன கருவிகள்

சிலைகள் அனைத்தும் வைக்கப்பட்டுள்ள இடத்தில் இருந்து முருகன் சன்னதி அருகே உள்ள ராஜா மண்டபத்துக்கு எடுத்து வரப்பட்டன. இதற்காக ராஜாமண்டபத்தில் மேஜைகள் போடப்பட்டு அதில் 41 சிலைகளும் வரிசையாக வைக்கப்பட்டன. பின்னர் ஒவ்வொரு சிலையாக ஆய்வு செய்யப்பட்டது. நடராஜர், ராஜராஜசோழன், வராகி அம்மன், யோகசக்தி என ஒவ்வொரு சிலையாக ஆய்வு செய்யப்பட்டது.

இந்த ஆய்வின் போது ஏற்கனவே வைத்திருந்த புகைப்படத்துடன் தற்போது உள்ள சிலைகள் ஒத்துப்போகிறதா? என்பது குறித்து ஆய்வினை மேற்கொண்டனர். மேலும் சிலையில் உள்ள எழுத்துக்களையும் பார்த்து உறுதிபடுத்திக்கொண்டனர்.

6½ மணி நேரம் நடந்த ஆய்வு

2 வகையான நவீன கருவிகளை கொண்டு இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. ஒவ்வொரு சிலையும் அங்குலம், அங்குலமாக ஆய்வு செய்யப்பட்டது. ஆய்வு செய்யப்பட்ட பின்னர் சந்தேகமான சிலைகள் குறித்து அவர்கள் குறிப்பெடுத்துக்கொண்டு அதனை கணினியில் பதிவு செய்து வைத்துக்கொண்டனர். காலை 9 மணிக்கு தொடங்கிய ஆய்வு மதியம் 3.30 மணிக்கு முடிவடைந்தது. 6½ மணி நேரம் இந்த ஆய்வு நடந்தது.

அடுத்த விசாரணை

இது குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜராமன் நிருபர்களிடம் கூறுகையில், “தஞ்சை பெரியகோவிலில் உள்ள சிலைகளின் தொன்மை குறித்து ஏற்கனவே ஆய்வு செய்தோம். அந்த பணிகள் மீதம் இருந்தது. இதையடுத்து தற்போது மீண்டும் ஆய்வு செய்துள்ளோம். இந்திய தொல்லியல் துறையின் நிபுணர்கள் குழுவினர் இந்த ஆய்வினை செய்துள்ளனர். அதன் பின்னர் தொல்லியல் துறையினர் சிலைகள் குறித்து சான்றிதழ் கொடுத்த பின்னர் அடுத்த விசாரணை தொடங்கப் படும்” என்றார்.

மேலும் சிலைகள் மாற்றப்பட்டது உறுதியாக இருக்கலாம் என கூறப்படுகிறது. அதன் அடிப்படையிலேயே நவீன கருவிகள் கொண்டு ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. மேலும் தொல்லியல் துறை நிபுணர்கள் சான்றிதழ் கொடுத்த பின்னர் மேலும் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என கூறப்படுகிறது.

மாரியம்மன் கோவில்

மேலும் இந்த குழுவினர் தஞ்சையை அடுத்த புன்னைநல்லூர் மாரியம்மன்கோவிலுக்கு சென்று அந்த கோவிலுக்கு சொந்தமான 19 சிலைகளையும் ஆய்வு செய்தனர்.

Next Story