மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி


மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலி
x
தினத்தந்தி 21 Oct 2018 3:00 AM IST (Updated: 21 Oct 2018 12:54 AM IST)
t-max-icont-min-icon

மரக்காணம் அருகே குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

பிரம்மதேசம், 

மரக்காணம் அருகே உள்ள முன்னூர் மாதா கோவில் தெருவில் வசிப்பவர் மார்க். இவரது மகள் எழிலரசி (வயது 13). அதே பகுதியை சேர்ந்தவர் ரட்சகர் மகள் ரிந்தியா மேரி(11). முன்னூரில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் எழிலரசி 8-ம் வகுப்பும், ரிந்தியா மேரி 6-ம் வகுப்பும் படித்து வந்தனர்.
நேற்று பள்ளி விடுமுறை என்பதால் எழிலரசி, ரிந்தியா மேரி மற்றும் அவர்களது தோழிகளான அதே பகுதியை சேர்ந்த நந்தினி, கோமதி ஆகிய 4 பேரும் முன்னூரில் இருந்து சேராப்பட்டு செல்லும் சாலையோரம் உள்ள குளத்துக்கு நேற்று காலை 10.30 மணிக்கு சென்றனர்.

பின்னர் 4 பேரும் குளத்துக்குள் இறங்கி கரையோரம் நின்று குளித்தனர். அப்போது எழிலரசி, ரிந்தியா மேரி, கோமதி ஆகியோர் ஆழமான பகுதிக்கு சென்றதாக தெரிகிறது. இதில் 3 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்துக் கொண்டிருந்தனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த நந்தினி காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என்று கூச்சலிட்டார்.
இந்த சத்தம் கேட்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் விரைந்து வந்து குளத்துக்குள் இறங்கி எழிலரசி, ரிந்தியா மேரி, கோமதி ஆகிய 3 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக சிறுவாடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர்களை பரிசோதித்த டாக்டர்கள், எழிலரசியும், ரிந்தியா மேரியும் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

பின்னர் கோமதி மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதற்கிடையே இதுபற்றி அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வந்து எழிலரசி, ரிந்தியா மேரி ஆகியோரின் உடல்களை பார்த்து கதறி அழுதது காண்போரின் கல்நெஞ்சையும் கரைய வைப்பதாக இருந்தது.

மாணவிகள் குளத்தில் மூழ்கி இறந்தது பற்றி அறிந்த பிரம்மதேசம் போலீசார் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு வந்து, உயிரிழந்த எழிலரசி, ரிந்தியா மேரி ஆகியோரின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குளத்தில் மூழ்கி 2 மாணவிகள் பலியான சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Next Story