குடவாசல் பேரூராட்சியில் வரியை குறைக்க நடவடிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு


குடவாசல் பேரூராட்சியில் வரியை குறைக்க நடவடிக்கை கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் பேச்சு
x
தினத்தந்தி 21 Oct 2018 4:15 AM IST (Updated: 21 Oct 2018 1:05 AM IST)
t-max-icont-min-icon

குடவாசல் பேரூராட்சியில் வரியை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கருத்து கேட்பு கூட்டத்தில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

குடவாசல்,

குடவாசல் பேரூராட்சியில் வரியை குறைக்க வேண்டும் என பொதுமக்கள் உணவுத்துறை அமைச்சர் காமராஜிடம் கோரிக்கை மனு அளித்தனர். இந்த நிலையில் வரி உயர்வு தொடர்பான பொதுமக்கள் கருத்து கேட்பு கூட்டம் குடவாசலில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் நிர்மல்ராஜ் தலைமை தாங்கினார்.

நாகை கோபால் எம்.பி., மாவட்ட வருவாய் அதிகாரி சக்திமணி, தஞ்சை மண்டல பேரூராட்சிகள் உதவி இயக்குனர் (பொறுப்பு) விஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்தில் உணவுத்துறை அமைச்சர் ஆர்.காமராஜ் பேசினார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நன்னிலம் தொகுதி மக்களுக்கு எந்த பிரச்சினை வந்தாலும் அதனை தீர்த்து வைப்பது எனது தலையாய கடமை என்பதை உணர்ந்து செயல்பட்டு வருகிறேன். குடவாசல் பேரூராட்சியில் வரி விதிப்பை 50 சதவீதம் உயர்த்தியதால் இங்கு வசித்து வருபவர்கள் கஷ்டப்படுவதை உணர்கிறேன்.

இங்கு பேசியவர்கள் அனைவரும் தங்களின் கஷ்டத்தை கூறினீர்கள். மாநில அளவில் ஐகோர்ட்டு உத்தரவுப்படி உயர்த்தப்பட்டுள்ள வரி மிகவும் கடுமையாக உள்ளது. இதை குறைக்க வேண்டும் என முதல்-அமைச்சர், உள்ளாட்சிதுறை அமைச்சரிடம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். அவர்களும் பொதுமக்களின் கருத்தை கேட்டு அதிகாரிகளுடன் பேசி முடிவெடுப்போம் என்று கூறியுள்ளனர். எனவே வரியை குறைக்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இதில் ஒன்றியக்குழு முன்னாள் தலைவர் பாப்பா.சுப்பிரமணியன், முன்னாள் துணைத்தலைவர் ராஜேந்திரன், திருவாரூர் மாவட்ட த.மா.கா. தலைவர் தினகரன், பேரூராட்சி செயல் அதிகாரி சமயசந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஓகை கூட்டுறவு சங்க தலைவர் சுவாமிநாதன் நன்றி கூறினார்.

Next Story