பண்ருட்டி அருகே: தொழிலாளி, விஷம் குடித்து தற்கொலை - மனைவி இறந்த விரக்தியில் விபரீத முடிவு
பண்ருட்டி அருகே மனைவி இறந்த விரக்தியில் தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
பண்ருட்டி,
பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு மாதாகோவில் தெருவை சேர்ந்தவர் அருள்பீட்டர். இவருடைய மகன் மகிமைதாஸ் (வயது 27). தொழிலாளி. இவருக்கும் உளுந்தூர்பேட்டை அருகே வடக்கிருப்பு கிராமத்தை சேர்ந்த சத்தியமேரிக்கும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு 8 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு குடிபோதையில் வீட்டுக்கு வந்த மகிமைதாசுக்கும், சத்தியமேரிக்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது. மேலும் அன்றைய தினம் சத்தியமேரி வீட்டில் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கினார். இதுகுறித்து அவரது தாய் ஆரோக்கியமேரி கொடுத்த புகாரின் பேரில் காடாம்புலியூர் போலீசார், சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் சத்தியமேரிக்கு திருமணமாகி 2 ஆண்டுகளே ஆவதால் அவர் வரதட்சணை கொடுமையால் இறந்தாரா? என்பது குறித்து கடலூர் சப்-கலெக்டர் சரயூ மேல் விசாரணை நடத்தி வந்தார்.
இந்த நிலையில் மனைவி இறந்ததால் விரக்தியடைந்து காணப்பட்ட மகிமைதாஸ் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதைபார்த்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு கடலூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று மகிமைதாஸ் உயிரிழந்தார். இதுகுறித்து காடாம்புலியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மனைவி இறந்த சில வாரங்களிலேயே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அக்கிராமத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Related Tags :
Next Story